மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு வழக்கம் போல் தண்ணீர் திறக்கப்படவில்லை.
பின்னர், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 90 அடியை எட்டியது.
மாயனூர் வழியாக முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர்
இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 2,737 கன அடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக அதிகரித்து 4,081 கன அடியாக உயர்ந்தது.
அதைத் தொடர்ந்து மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 777 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து 1,500 கன அடியாக உயர்ந்துள்ளது. நேரம் செல்ல செல்ல நீர் வரத்தின் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதையடுத்து, நாளை மறுநாள் கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டப் பாசனத்திற்காகத் தண்ணீர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து விடப்பட உள்ளது.#Trichypic.twitter.com/RIrVdfGFqi
— Indian Express Tamil (@IeTamil) September 4, 2026
நீண்ட நாட்களாக வறண்டு கிடந்த காவிரியில் தண்ணீர் மிதமான வேகத்தில் ஆர்ப்பரித்து வருகிறது. கம்பரசம்பேட்டை அருகே உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில், அந்த புதுத் தண்ணீரில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகத்துடன் ஆரவாரக் குளியலில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் கல்லணை திறப்பு
திருச்சி மாநகரத்தைக் கடந்து, பெல் (BHEL) மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பகுதிகளைத் தாண்டி காவிரி நீர் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையை வந்தடைந்துள்ளது. கல்லணைக்குத் தற்போது வினாடிக்குச் சுமார் 400 கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கிறது.
நாளை மறுநாள் கல்லணையில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக அதிகாரப்பூர்வமாகத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
ஏற்கனவே முக்கொம்பு மேலணையில் இருந்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லணை திறக்கப்படுவதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரமடையும் என்பதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
