நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விபரீதம்: விஷவாயு தாக்கி 37 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவில் கச்சா எண்ணெய்யை திருட முயன்ற போது விஷவாயு தாக்கியது. இதில் 37 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

நைஜீரியாவில் உள்ளது ரிவர்ஸ் மாநிலம். இங்கு எண்ணெய் வளம் மிக அதிகம். கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்களின் வழியாக சர்வ சாதாரணமாக எண்ணெய்யை திருடும் கும்பல்கள் பல உண்டு.

இந் நிலையில் இன்று (செப்.4) ஒக்கிரிகா என்ற பகுதியில் குழாய்களில் உள்ள கச்சா எண்ணெய்யை திருட 200க்கும் மேற்பட்டோர் சிறிய ரக படகுகளில் வந்துள்ளனர். எண்ணெய்யை அவர்கள் திருட முயன்ற போது குழாய்களில் இருந்து விஷவாயு வெளியேறியது.

அதை சுவாசித்தவுடன், அங்குள்ளவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். ஆற்றில் விழுந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 37 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதுகுறித்து பேசிய ஒரிக்கா காவல்துறை செய்தி தொடர்பாளர் பிளஸ்சிங் அகாபே, ‘பலியானவர்கள் அனைவரும் கச்சா எண்ணெய்யை திருட வந்தவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

Source link