போதைப் பொருளை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும்; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சண்டிகர்: “சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் ஆய்வுகள் இருக்க வேண்டும்,”என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார்.

பஞ்சாப் பல்கலையில் நவீன பகுப்பாய்வு கருவி, மேம்படுத்தப்பட்ட அதிநவீன கருவி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மன்றம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, துணை ஜனாதிபதியும், பஞ்சாப் பல்கலை வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

எந்தவொரு ஆராய்ச்சியும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் எந்த வகையான ஆய்வை மேற்கொண்டாலும், அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில், அதன் வெற்றி பல்கலை அளவிலேயே நின்று விடும். நம் ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதவும் வகையில், சரியான திசையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் ஒரு நோக்கத்துடன் அறிவியல் இணைந்திருக்க வேண்டும்.

அதிகளவிலான தரவுகளை உருவாக்க மட்டுமே நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது. பொருத்தமான கேள்விகளை எழுப்பவும், சமூகம் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல்களுக்கு தீர்வு காணவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

தோல்வியை கண்டு ஆய்வு மாணவர்கள் சோர்ந்து போகக் கூடாது. ஆய்வில் நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் தோல்வியடைய வேண்டும் என்பதுதான். எங்கே தவறு செய்தோம் என்பதை அறிந்துகொள்ள நாம் தோல்வி அடைந்திருக்க வேண்டும். நம் மன வலிமை அதிகரிக்கவும் தோல்விதான் உதவும். தோல்விகள் நம்மை ஏமாற்றமடைய செய்யக்கூடாது.

நம் புத்தாக்க முயற்சிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தீர்வுகள் விரிவுபடுத்தக்கூடியதாகவும், மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அவை சமூகத்தின் மற்றும் தொழில்துறையின தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, ஆய்வுகள் எப்போதும் சரியான இலக்கை கொண்டிருக்க வேண்டும்.

வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் சுயசார்பு இந்தியா ஆகிய இலக்குகளை நோக்கி நம் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில், நம் ஆய்வுகள் தேசிய முன்னுரிமைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். உடல்நலம், எதிர்காலம் மற்றும் கனவுகள் மிகவும் விலைமதிப்பற்றவை. எனவே, போதைப்பொருட்களை எப்போதும் நாடாமல் இருக்க வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் இதை வலியுறுத்தி வருகிறேன்.

போதைப்பொருட்களை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகி, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் அமைந்துள்ளது. அதனால்தான், போதைப் பொருள் குறித்து இங்கு வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது. அண்டை நாடுகள் நம்மை சீர்குலைக்க விரும்புகின்றனர். அதற்கு நாம் இடம் தரக்கூடாது.

பஞ்சாப் பல்கலை, 143 ஆண்டுகள் பழமையான சிறந்த பாரம்பரியத்தை கொண்ட கல்வி நிறுவனமாக திகழ்கிறது. பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், கவர்னர்கள், எம்.பி.,க்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை பஞ்சாப் பல்கலை உருவாக்கியுள்ளது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் பஞ்சாப் பல்கலை, 35-வது இடத்தை பிடித்துள்ளதற்காக மனமார பாராட்டுகிறேன். உலக அளவில் முதல் 100 சிறந்த பல்கலை பட்டியலில் இடம்பிடிப்பதே அடுத்த இலக்காக இருக்க வேண்டும். பாரம்பரியத்தை தக்க வைக்க வேண்டும். நாடு பிரிவினையின்போது, பஞ்சாப் பல்கலையின் கணிசமான பகுதி பாகிஸ்தானுக்கு சென்று விட்டது. பஞ்சாப் பல்கலையை சர்வதேச தரத்துக்கு மாற்றுவதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தின் பெருமையும் நம் நாட்டின் பெருமையும் மீண்டும் நிலைநாட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பஞ்சாப் கவர்னரும், சண்டிகர் யூனியன் பிரதேச தலைமை நிர்வாக அதிகாரியுமான குலாப் சந்த் கட்டாரியா, ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், சண்டிகர் எம்.பி., மணீஷ் திவாரி, துணைவேந்தர் மீனாட்சி கோயல், பேராசிரியர்கள், மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.

Source link