புதுடில்லி: தேசிய தலைநகர் டில்லியில் பல இடங்களில் கனமழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் நடந்து சென்ற மக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்தனர். இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
டில்லி விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் உள்நாட்டு விமானசேவை பாதிக்கப்பட்டது. ஆமதாபாத், மும்பை மற்றும் போர்ட் பிளேரில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்குவதில் கால தாமதம் ஆனது.
இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், டில்லியில் நிலவும் மோசமான வானிலை விமான சேவையை பாதித்துள்ளது. விமான நிலையத்திற்கு கிளம்பும் முன்னர் இணையதளம் அல்லது மொபைல்போன் செயலியில் விமானங்கள்களம்பும் நிலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், விமான நிலையம் வருவதில் கால தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், டில்லிக்கு வரும் மற்றும் இங்கிருந்து கிளம்பும் விமானங்களின் சேவையில் வானிலை காரணமாக மாற்றம் ஏற்படலாம். விமான நிலையத்திற்கு கிளம்பும் முன்னர் தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே வானிலைமையம், டில்லிக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. நொய்டா மற்றும் காஸியாபாத் நகரங்களுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
