இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தலைமைச் செயலாளர் சாய் குமாரை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய்க்குக் கடிதமும் எழுதியிருந்தார். மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பாகச் சட்டப்பேரவையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாகச் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் இன்று (04.09.2026) மாலை சந்தித்துப் பேசியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சண்முகம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர். தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்றும், அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் 9ஆம் தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் த.வெ.க. அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்து வரும் நிலையில், பல்வேறு விவகாரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
