– நமது நிருபர் –
தமிழக அரசின் முக்கிய வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில், காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார்.இந்த நியமனம் தொடர்பான தகவல், ராகுலுக்கு சொல்லப்படாததால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிதம்பரத்தை நியமித்து, அது தொடர்பான அரசாணை வெளியான பின்னரே, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், இந்த விவகாரத்தை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு ராகுல், ‘இந்த நியமனம் தொடர்பாக, சிதம்பரத்திற்கு முன்கூட்டியே தெரியுமா’ என, கேட்டுள்ளார். அது பற்றி தனக்கு தெரியாது என, வேணுகோபால் பதில் கூறியிருக்கிறார். பின்னர், ஒரு எம்பி வாயிலாக, சிதம்பரத்திடம் வேணுகோபால் விசாரித்தபோது, ‘எனக்கே இப்போது தான் தெரியும்’ என, சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
ஆனால், சிதம்பரத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே, தமிழக அரசு அவரை, அந்த பதவியில் நியமித்தது தெரியவந்துள்ளது. இந்த தகவலை, மீண்டும் ராகுலிடம் தெரிவித்தபோது, அவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இது குறித்து, சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது:சிதம்பரம் போன்ற சட்ட வல்லுனரின் பங்கு, தமிழக அரசின் சட்ட விவகாரங்களில் முக்கியத்துவம் பெறுவது இயல்பானது. சிதம்பரம் மூத்த தலைவர் மட்டுமல்ல, மத்திய நிதி அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். அவரது அனுபவம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முக்கிய பிரச்னைகளில்,சிதம்பரத்தின் சட்ட ஆலோசனைகள், தமிழக அரசுக்கு நிச்சயம் பயன் தரும். எனவே, இதை சர்ச்சையாக்க தேவையில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
