காலை உணவுத் திட்ட சாம்பாரில் சாணி பவுடர் கலப்பு..! மாணவியை தூண்டிவிட்ட கொடூரம்..! 200 மாணவர்களின் உயிர்..! சத்தியமங்கலத்தில் பேரதிர்ச்சி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பள்ளி மாணவியை தூண்டிவிட்டு சாணி பவுடரை கலக்கச் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், தினமும் குழந்தைகளுக்கு பரிமாறுவதற்கு முன்பாக உணவுகளை தலைமை ஆசிரியர் சுவைத்துச் சரிபார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை தலைமை ஆசிரியரின் மேஜைக்கு வழக்கம் போல் சாம்பார் மாதிரி கொண்டுவந்து வைக்கப்பட்டது. அப்போது, அந்த சாம்பார் வழக்கத்திற்கு மாறாக அதிக மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்ததால் சந்தேகமடைந்த ஆசிரியை ரேவதி என்பவர் அதனை சுவைத்துப் பார்த்துள்ளார். அப்போது அந்த சாம்பார் கசப்புச் சுவையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தலைமை ஆசிரியை குமுதா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

மறுநாள் சமையலர் பொன்னம்மாவிடம் விசாரித்தபோது, தான் வழக்கமான அளவிலேயே மஞ்சள் பொடி சேர்த்ததாக கூறியுள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் மேஜையில் வைக்கப்பட்ட சாம்பாரில் மட்டும் எப்படி நிறமும் சுவையும் மாறியது என்பது குறித்துப் பள்ளி தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், தலைமை ஆசிரியருக்கு சாம்பாரை எடுத்து வந்த மாணவி, அதில் சாணி பவுடரை கலந்தது தெரியவந்தது. அச்சிறுமியிடம் விசாரித்தபோது, ராமபையலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னிடம் சாணி பவுடரை கொடுத்து, காலை உணவுக்கான சாம்பாரில் கலக்குமாறு தூண்டிய அதிர்ச்சி தகவல் அம்பலமானது. எனினும், அந்த மாணவி ஒட்டுமொத்த சாம்பாரிலும் கலக்காமல், தலைமை ஆசிரியரின் சோதனைக்காக வைக்கப்பட்ட சிறிய அளவிலான சாம்பாரில் மட்டும் கலந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக ஆறுமுகத்தைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆறுமுகத்தின் மனைவி ஆலம்மாள் சில மாதங்களுக்கு முன்புவரை அதே பள்ளியில் காலை உணவுத் திட்ட சமையலராகப் பணியாற்றி வந்ததும், அவர் சரிவர சமைக்காத காரணத்தால் அப்பணியிலிருந்து நீக்கப்பட்டு வேறொருவர் நியமிக்கப்பட்டதும் தெரியவந்தது. தனது மனைவியை வேலையிலிருந்து நீக்கிய பள்ளி நிர்வாகத்தின் மீது கொண்ட ஆத்திரத்தில்தான், காலை உணவுத் திட்டத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி பழிவாங்குவதற்காக இத்தகைய விபரீத செயலில் அவர் இறங்கியது உறுதியானது.

இதனையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், அவரை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவி மொத்த சாம்பாரிலும் இதை கலந்திருந்தால் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்ற உண்மை அப்பகுதி மக்களையும் பெற்றோர்களையும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Source link