சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னை “கொள்கை ஆசான்” எனக் குறிப்பிட்டதில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமோ அல்லது எதிர்பார்ப்போ இல்லை என்றும், ஆழமான கொள்கை உணர்வின் அடிப்படையிலேயே அவர் அவ்வாறு பேசினார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முகநூல் நேரலை வாயிலாகத் தொண்டர்களிடையே உரையாற்றிய திருமாவளவன், சட்டமன்றப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எவ்வித தயக்கமுமின்றி, முழுமனதுடன் தன்னை கொள்கை ஆசானாக ஏற்றுக்கொண்டது விடுதலை சிறுத்தைகள் பேரியக்கத்திற்குப் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அரசியல் சூழல்களைக் கடந்து, கூட்டணிக் கணக்குகளுக்காக மட்டும் பேசாமல், சட்டமன்ற அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் மனப்பூர்வமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்த உதயநிதிக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
அதேநேரத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் இந்த உரையை விமர்சித்துப் பேசி வருவதையும், சமூக வலைதளங்களில் திருமாவளவனுக்கு எதிராக எதிர்மறையான கருத்துகள் பரப்பப்படுவதையும் சுட்டிக்காட்டிய அவர், விசிக தொண்டர்கள் யாரும் இதற்குப் பதிலடி தருகிறோம் என்ற பெயரில் தரம் தாழ்ந்த விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், முதிர்ச்சியோடு இவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், வரும் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தின நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முக்கியப் பொறுப்பாளர்களும் பிரதிநிதிகளும் நேரில் பங்கேற்று மலரஞ்சலி செலுத்துவார்கள் என்பதையும் அவர் தனது நேரலையில் உறுதிப்படுத்தினார்.
