ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்: காலிப்பணியிடங்களால் கலங்கும் ஊழியர்கள்

மதுரை: தமிழக மின்வாரியத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், மின் நுகர்வோருக்கான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், ‘65,921 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், ஏற்கனவே மின்வாரிய தேர்வில் வெற்றி பெற்றோர், ஒப்பந்த ஊழியர்கள் என, நிரந்த பணியிடங்களுக்கு காத்திருப்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இந்நிலையில், மின் கணக்கீட்டாளர், களப்பணியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் , 60 சதவீதத்திற்கு மேல் காலியாக இருப்பதால், மின் கட்டண வருவாயிலும் இழப்பு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

மின்வாரியத்தில் கள உதவியாளர்களுக்கான தேர்வு கடந்தாண்டு நடத்தப்பட்டு, தரவரிசைப்பட்டியல் மே மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், இன்னும் இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் இல்லாமல், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றோர் மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன், அமைச்சர் நிர்மல்குமார், 10 ஆயிரம் களப்பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்போவதாக பேசியது, தேர்வு எழுதியோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், மின்வாரியத்தில், 2018 வேலைப்பளு ஒப்பந்தப்படி, அனுமதிக்கப்பட்ட, 7,591 மின் கணக்கீட்டாளர் பணியிடங்களில், ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால், மின் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களே பல ஆண்டுகளாக கணக்கீட்டு பணியையும் செய்கின்றனர்.

கணக்கீட்டாளர்கள் இல்லாத இடங்களில் ஓய்வுபெற்றவர்கள், ‘அவுட்சோர்சிங்’ முறையில் பணியாற்றுகின்றனர். மின் இணைப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப கணக்கீட்டாளர்கள் நியமிக்கப்படாததால், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.

மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link