நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 4 மாணவிகள் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது, அந்த சாலையில் எதிர் திசையில் கல்லூரி பேருந்து ஒன்று வந்துள்ளது. இதில், கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக கல்லூரி பேருந்தும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற 4 மாணவிகளும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மாணவிகளை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே 2 மாணவிகள் உயிரிழந்தனர். மற்ற 2 மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, 4 மாணவிகளின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவிகளில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், மற்றொரு மாணவி உடன் பயின்று வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், உயிரிழந்த மாணவிகளின் பெயர் விவரங்களும் வெளியாகி உள்ளது. இதில், கல்லூரி மாணவி சுபிதா (19 வயது), பள்ளி மாணவிகளான நிவேதா (16 வயது), தனு ஸ்ரீ (11 வயது), அபிநயா (10 வயது) ஆகும். இவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிய தொடங்கினர்.
அங்கு, மாணவிகளின் சடலங்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
