காத்மாண்டு:நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், திரிசூலி நீர் மின் திட்டத்தின் சுரங்கத்தில் சிக்கி, ஒன்பது நாட்களாக தவித்த தொழிலாளர்கள் இருவர், உயிருடன் நேற்று மீட்கப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லையில், இமயமலை தொடரில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்தில் இருந்த மாபெரும் பனிப்பாறையின் ஒருபகுதி, ஆக., 26ல் திடீரென சரிந்து விழுந்தது.
இதன் காரணமாக உருவான மாபெரும் பனி, மண் மற்றும் பாறைகள் நதிக்குள் சரிந்து, மிகக் கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது லெண்டே கோலா நதியில் விழுந்தது.
இந்த நதி, நேபாளத்தில் பாயும் திரிசூலி நதியுடன் இணைவதால், அங்கு மாபெரும் வெள்ளம் சீறி பாய்ந்து, வந்த வேகத்தில், சீன - நேபாள எல்லையில் உள்ள கியிரோங் சோதனை சாவடி, பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் சாலைகளை அடித்துச் சென்றது.
குறிப்பாக, அப்பகுதியில் இருந்த நீர் மின் திட்டங்களின் சுரங்கங்களுக்குள் தண்ணீர் மற்றும் சேறு புகுந்ததால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.
இந்நிலையில், மத்திய நேபாளத்தில் உள்ள திரிசூலி 3ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கத்திற்குள் இருந்து மனித குரல்கள் கேட்பதை கண்டறிந்த நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியை தீவிரப் படுத்தினர். மீட்புப் படையினரின் தொடர் முயற்சியின் காரணமாக, சுரங்கத்திற்குள் 558 அடி துாரத்தில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சஞ்சய் ஷா 30, கபீர் மகர்ஜன், 45 என, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த மகர்ஜன் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிற்கு மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சஞ்சய் ஷா உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாய்ப்பில்லை
விபத்தில் சிக்கியது குறித்து ஷா கூறியதாவது:
விபத்து நடந்த அன்று நான் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தேன். அனைவரின் பாதுகாப்பிற்கும் நான் பொறுப்பானவன் என்பதால், பேரிடர் ஏற்பட்டபோது மற்றவர்களை அங்கிருந்து தப்பியோடவலியுறுத்தினேன்.கடைசியில் நான் வெளியேற நினைத்த போது சிக்கிக் கொண்டேன். அனைவரும் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை.
பாராட்டுகள்
இது நீண்ட சுரங்கம் என்பதால் மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம். உயிரை பணயம் வைத்து எங்களை மீட்ட மீட்பு படையினருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விடா முயற்சியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, ஒன்பது நாட்களுக்கு பின் இருவரை உயிருடன் மீட்ட மீட்புப் படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
![]() |

