ரூ.5 லட்சம் பரிசு, தங்கப் பதக்கம்; தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைவுகூரும் வகையில், சமூக நீதிக்காகப் பாடுபடும் சிறந்த ஆளுமைகளுக்குத் தமிழக அரசு வழங்கும் ‘வைக்கம் விருது 2026’-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் அடங்கிய இவ்விருதுக்குத் தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசுத் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் அறிவித்துள்ளார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் உயர்வுக்காக அரும்பாடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் கேரளாவின் வைக்கம் நகரில் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தைப் போற்றும் வகையில், சமூக நீதி நாளன்று இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பது வழக்கம்.

தமிழகத்தைத் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலோ அல்லது சர்வதேச அளவிலோ ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் வளர்ச்சிளுக்காகவும் பங்காற்றியவர்களுக்கே இவ்வாண்டிற்கான (2026) விருது வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்படும் வெற்றியாளருக்கு ₹5 லட்சம் பொற்கிழி, சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் பரிசாக அளிக்கப்படும்.

இவ்விருதிற்குத் தகுதியுடையவர்கள் தங்களுடைய முழுமையான சுயவிவரக் குறிப்பு, சமூகப் பணிகளுக்கான சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள “பொது மற்றும் மறுவாழ்வுத்துறைச் செயலர்” முகவரிக்கு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், vaikomaward.tamilnadu@gmail.com என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களைச் சிறப்புத் தேர்வுக்குழு பரிசீலித்துத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் என அரசுத் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் தெரிவித்துள்ளார்.

Source link