ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் கிம் அஸ்ட்ருப், ஆன்டர்ஸ் ராஸ்முசென் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-13 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 16-21 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இந்திய ஜோடி 21-18 என வென்றது.
ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 16-21, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் செயுக் இயு லீ மோதினர். மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 16-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
