புதுடில்லி: தாய்லாந்தில் இருந்து டில்லிக்கு ஆகஸ்ட் 4ம் தேதி வந்த, ‘ஏர் இந்தியா’ விமானம், நடுவானில் 300 அடி கீழிறங்கி கடுமையாக குலுங்கியதில், 24 பேர் காயமடைந்த சம்பவத்தை விசாரித்த விமான விபத்து விசாரணை அமைப்பு, விமானி போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்துள்ளது. மேலும், விமானத்தின் மூன்று இயந்திரங்கள் செயலிழந்ததும் தெரிய வந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டில்லிக்கு, கடந்த மாதம் 4ம் தேதி இயக்கப்பட்ட, ‘ஏர் இந்தியா’ விமானம் ஏ.ஐ., 2379, நடுவானில் திடீரென, 300 அடி கீழிறங்கியது.
இந்த விமானத்தில் ஊழியர்கள், பயணியர் என 145 பேர் பயணித்த நிலையில், விமானம் கீழ் நோக்கி பாய்ந்ததில் 24 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விமான தயாரிப்பு நிறுவனமான பிரான்சின், ‘ஏர் பஸ்’ ஆய்வு நடத்துகிறது. அதே போல், மத்திய அரசின் விமான விபத்து விசாரணை அமைப்பு தனியே விசாரணை நடத்தி வருகிறது.
அவர்கள், அரசுக்கு சமர்ப்பித்துள்ள முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆக., 4ம் தேதி, ஏர் இந்தியா ஏ.ஐ., 2379 விமானம் தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டில்லி வந்து கொண்டிருந்தபோது, 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறப்பதை கட்டுப்படுத்தும், ‘ஹைட்ராலிக்’ அமைப்புகளில் அடுத்தடுத்து அழுத்தம் குறைந்தது.
தானியங்கி விமான இயக்க அமைப்பு துண்டிக்கப்பட்டதுடன், விமானம் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட 372 அடி மேலே சென்று, அதன் பின், 292 அடி வரை கீழே பாய்ந்தது.
சில விநாடிகளில் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் மீண்டும் செயல்படத் தொடங்கின. சம்பவத்தின்போது சீட் பெல்ட் அணியும்படி எச்சரிக்கை விடப்படாததால், பயணியர் மற்றும் விமான பணியாளர்கள் காயமடைந்தனர். 20 பயணியர் மற்றும் நான்கு விமான பணியாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றனர். விமானம் டில்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்தின் ஹைட்ராலிக் உதிரி பாகங்கள் ஆய்வுக்காக அகற்றப்பட்டுள்ளன. குரல் பதிவு கருவி, விமானத் தகவல் பதிவு கருவி உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் பராமரிப்பு வரலாறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சம்பவ நேரத்தில் மோசமான வானிலை இருந்ததாக விமானக் குழுவினரோ, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினரோ தெரிவிக்கவில்லை. விமானி மற்றும் துணை விமானி இருவரிடமும் மேற்கொண்ட போதைப்பொருள் பயன்பாட்டுக்கான பரிசோதனையில், துணை விமானியின் மாதிரி சரியாக இருந்தது.
ஆனால், விமானியின் ஆரம்ப மாதிரியும், உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட ரத்த பரிசோதனையும் போதைப்பொருள் பயன்பாட்டை உறுதி செய்தது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விமானி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின் இறுதி அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
