மொபைல் போனை தரும்படி பக்தர்களை கட்டாயப்படுத்தாதீங்க அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: ‘கோவிலுக்குள் மொபைல் போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், பக்தர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்’ என, கோவில் செயல் அலுவலர்களுக்கு, அறநிலையத்துறை உத்தர விட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 52 முதன்மை கோவில்களில், செப்., 1 முதல் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது; 5 ரூபாய் கட்டணம் செலுத்தி, பாதுகாக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி யது. பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என, ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வருவோரிடம் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக, இந்த உத்தரவில் சில தளர்வுகளை மேற்கொள்வது தொடர்பாக, துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ரமேஷ் கருத்து கேட்பு நடத்தி உள்ளார். அதன் அடிப்படையில், 52 கோவில் செயல் அலுவலர்களுக்கு சில அறிவுரைகளை அறநிலையத் துறை வழங்கியுள்ளது.

அதன்படி, ‘பக்தர்களை கட்டாயமாக லாக்கரில் மொபைல் போனை வைக்கும்படி சொல்ல வேண்டாம்; தானாக முன்வந்து வைப்போரிடம் மட்டும் பெற்றுக்கொள்ளவும். தொடர் விடுமுறை காரணமாக, நீண்ட நேரம் வரிசையில் மொபைல் போனை வைப்பதற்காக நிற்கின்றனர் என்ற பிரச்னை வரக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பொருந்தும் என அறிவிக்குமாறு, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Source link