பேரிடரை சமாளிக்க 2வது தலைநகர்: தமிழக அரசுக்கு கோரிக்கை

கோவை: ‘தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மாற்று நிர்வாக மையமாக செயல்படும் வகையில், 2வது நிர்வாகத் தலைநகரை உருவாக்குவது காலத்தின் அவசியம்’ என, கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடல் மட்டத்துக்கு மிக அருகில் சென்னை அமைந்திருப்பதால், கடல் மட்டம் உயர்வு, புயல், கனமழை, வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு அதிகமாக பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது.

மிக முக்கியமாக தமிழக அரசின் முக்கிய அலுவலகங்கள், நிர்வாக கட்டமைப்புகள், ஆவணக் காப்பகங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் சென்னையிலேயே இருக்கின்றன.

எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் பேரிடர் ஏற்பட்டு நிர்வாக செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும் சூழலில், மாற்று நிர்வாக அமைப்பை உருவாக்குது மிகவும் அவசியம் என, கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இவ்வமைப்பின் நிறுவனர் செல்வராஜ், தமிழக முதல்வர் விஜய்க்கு அனுப்பிய கோரிக்கை கடிதம்: புவியியல் மற்றும் பேரிடர் அபாயங்களை முழுமையாக ஆய்வு செய்து, தகுதியான பாதுகாப்பான இடத்தில் 2வது நிர்வாக தலைநகரை உருவாக்க வேண்டும்.

அந்நகரில் படிப்படியாக முக்கிய அரசு அலுவலகங்கள், ஆவணக் காப்பகங்கள், அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள், தரவு மையங்கள், அத்தியாவசிய நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இயற்கை பேரிடர் அல்லது வேறெந்த அவசர நிலையிலும், சென்னைக்கு மாற்றாக அரசின் முக்கிய நிர்வாக பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் அளவுக்கு உருவாக்க வேண்டும்.

முக்கிய அரசு தரவுகள் மற்றும் ஆவணங்களுக்கு பாதுகாப்பான மாற்று காப்பு மையங்களை ஏற்படுத்தி, நிர்வாக தகவல்கள் ஒரே இடத்தில் குவியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, நகரமைப்பு, புவியியல், காலநிலை மாற்றம், உள்கட்டமைப்பு வல்லுனர்கள் அடங்கிய உயர்மட்ட குழு அமைத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

பேரிடர் ஏற்பட்ட பின் நடவடிக்கை என்கிற அணுகுமுறையை கடந்து, பேரிடருக்கு முன்பே தயார்நிலை என்ற தொலைநோக்கு நிர்வாக அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

2வது தலைநகரை அமைப்பதற்கான ஆய்வு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் துவக்க வேண்டும். இது, தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கும் கோரிக்கை. இவ்வாறு, கூறியுள்ளார்.

Source link