தென்காசி மார்க்கெட்டில் பயங்கரம்- தலை துண்@டித்து இளைஞர் கொ@லை

தென்காசி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்காகப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தலை துண்டித்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள தீபத்திடல் மார்க்கெட் பகுதியில் இந்தத் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. நேற்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்பதால், அந்த மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் இளைஞர் ஒருவர் பண்டிகைக்கான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மக் கும்பல் ஒன்று, கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த இளைஞரை வழிமறித்துத் தாக்கத் தொடங்கியது. தப்பி ஓட முயன்ற அவரைத் துரத்தித் துரத்தி வெட்டிய அந்தக் கும்பல், கொடூரமான முறையில் அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டது.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் ஆழ்வாக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா மற்றும் கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையால் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் ஆலங்குளம் காவல்துறை கண்காணிப்பாளர் கிளாசன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீவிர ஆய்வு நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? கொலையாளிகளுக்கும் அவருக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் தொழில் போட்டியா என்ற கோணங்களில் ஆழ்வாக்குறிச்சி போலீசார் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த பகுதி ஒரு பரபரப்பான மார்க்கெட் பகுதி என்பதால், அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளைப் போலீசார் சேகரித்து வருகின்றனர். 

Source link