திமுக முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம், சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அவரது வீடு மற்றும் அபிராமபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் இல்லம் உள்ளிட்ட சுமார் 19 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்களது ஆய்வை முடுக்கிவிட்டுள்ளனர்.
அரசியல் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) வசூல் என்ற பெயரில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு நிறுவனங்களை மிரட்டி சட்டவிரோத முறையில் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனையைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
