“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சி பிறந்தநாள் இன்று: நினைவு கூர்ந்த முதல்வர் விஜய், ஸ்டாலின்

சென்னை: “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார்.

தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

திமுக தலைவர், ஸ்டாலின்

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள், நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.? திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.

இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம். அவற்றுடன், 1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம்.

தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்.

Source link