உலகின் பெரும் பணக்காரர்கள் அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை அதிக விலைக்கு ஏலத்தில் வாங்குவது அவ்வப்போது கவனம் பெறும். அந்த வகையில், அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் அரிய வகையைச் சேர்ந்த வெள்ளை நிற இளம் வேட்டை பருந்து ஒன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில், கனடாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் அரிய வகை இளம் ஃபால்கன் எனப்படும் வேட்டை பருந்து ஏலத்திற்கு வைக்கப்பட்டது. சென்ற ஏலம்
ரூ.3 கோடியை தாண்டிய ஏலம்?
இந்த அரிய வகை பருந்துக்கான ஏலம் சுமார் 2 லட்சம் ரியாலில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஏலத்தில் பலரும் போட்டியிட்ட நிலையில், அதன் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
இறுதியில் இந்த இளம் வேட்டை பருந்து சுமார் 2.86 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.3.4 – 3.7 கோடிஆகும். பறவையின் அரிய தன்மை, மற்றும் வேட்டைப் பயிற்சிக்கான திறன் உள்ளிட்ட காரணிகளால் அதன் விலை பல மடங்கு உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பருந்தை வாங்கியது யார்?
இந்த ஏலத்தின் விலையைவிட, அதை வாங்கியது யார் என்பதுதான் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களின்படி, “கார்மோஷா அல்ட்ரா வைட்” வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த அரிய வெள்ளை பருந்தை ஷேக்கா என்ற இளம் பெண் ஏலத்தில் வென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏல நிகழ்ச்சியில் ஒருவர் அரிய வகை வெள்ளை பருந்தை கையில் வைத்தபடி ஏலம் விடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. ஏலத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அங்கிருந்த சிறுமி அந்தப் பருந்தை தனது கைகளில் வாங்கிச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.
சிறுமியுடன் இருந்த நபர் அவரது தந்தை என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மிகப்பெரும் பணக்காரர் ஒருவர் தனது மகளின் பிறந்தநாள் பரிசாக இந்த விலை உயர்ந்த வெள்ளை நிற பருந்தை வாங்கியதாக கூறி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகை பருந்தை சிறுமி பெற்றுக்கொள்ளும் காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
எனினும், அந்தச் சிறுமி யார், பருந்தை வாங்கியவர் உண்மையில் அவரது தந்தையா, இது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.
சில தகவல்களில் இதன் மதிப்பு சுமார் ரூ.3.4 கோடி முதல் ரூ.3.9 கோடி வரை இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஏலத் தொகை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை
அரிய வகை வேட்டை பருந்துகள் வளைகுடா நாடுகளில் பாரம்பரிய வேட்டை கலாச்சாரத்துடன் தொடர்புடையவையாக இருப்பதால், அவற்றுக்கான ஏலங்கள் பெரும் கவனம் பெறுவது வழக்கம்.இந்த நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஒரு பிறந்தநாள் பரிசுக்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய பறவை வாங்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
எனினும், இந்தப் பருந்தை உண்மையில் வாங்கியவர் யார், அதன் இறுதி ஏலத் தொகை எவ்வளவு, பிறந்தநாள் பரிசாக வாங்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
