தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை
அமைச்சரின் எச்சரிக்கைக்கு பிறகும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலித்ததாகக் கூறி பல்வேறு டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 150 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் திடீர் பணிநிறுத்தம் மற்றும் கடையடைப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிரடியான நடவடிக்கை எடுத்த TVK இதுதான் விஷயமா! Bottle க்கு 10 ரூபாய்க்கு Full Stop
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை
இதற்கிடையே, அரசுக்கோ, காவல்துறைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ முன் அறிவிப்பு அளிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூடியதாக அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள்40 பேரைஉடனடியாக பணியிடைநீக்கம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒருபுறம் தொடரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடிய மேற்பார்வையாளர்கள் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடுவதை கட்டுப்படுத்தவும் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரே நேரத்தில் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் அடுத்தகட்டத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
