பெருமையாகப் பேட்டி கொடுத்த இன்ஸ்டா பிரபலம்; 72 மணி நேரத்தில் தூக்கிய காவல்துறை

டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தில், நிஷூ ஆசாத் என்ற மாணவி தனது தந்தையுடன் பங்கேற்றார். இந்நிலையில், போராட்டத்தின் போது அங்கு வந்த கும்பல் ஒன்று நிஷூவின் தந்தை சஞ்சய் என்பவரைக் கடுமையாகத் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். 

இது தொடர்பாக உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ஸ்வதந்திரா பரத்வாஜ் என்பவர் அளித்த பேட்டியில், “நான் தான் நிஷு என்ற மாணவியின் தந்தை மண்டையை உடைத்தேன். ஆனால், எனக்கு உள்ள அரசியல் தொடர்புகளால் தப்பிவிட்டேன்’’ என்று கூறியிருந்தார். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.   

இந்நிலையில், போராட்டத்தில் தங்களது ஆதரவாளரைத் தாக்கிய பரத்வாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நேற்று நாடாளுமன்ற தெரு காவல்நிலையத்திற்குக் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் பேரணியாகச் சென்றனர். பின்னர், அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில், ”முதல் நாளில் இருந்தே எங்கள் போராட்டத்துடன் ஒரு சிறுமி இணைந்திருந்தார்.

அவரது தந்தையும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். நாங்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தோம். அப்போது,  அங்கு வந்த ஒரு கும்பல், சிறுமியின் தந்தையைக் கடுமையாகத் தாக்கியது. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதனைக் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்ய காவல்துறையை வலியுறுத்தினோம். ஆனால், எங்கள் கோரிக்கையை காவல்துறை ஏற்கவில்லை. தற்போது 72 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்வதாக டெல்லி காவல்துறையினர் உத்தரவாதம் அளித்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், பரத்வாஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனிடையே, சிறுமியும் அளித்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இவர் மீது கொலை, போக்சோ மற்றும் வன்கொடுமை சார்ந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இந்தத்துவாவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.  

Source link