கடலூர்: சிதம்பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், தவெக தொண்டர்கள் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மேலகுறியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைமணி மகன் குகன் (24), கீழகுறியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கலைராஜன் (41) – இருவரும் அந்தந்த கிராமத்தின் தவெக கிளை செயலாளர்களாக இருந்தனர்.
நேற்று காலை இருவரும் எலக்ட்ரிகல் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் சென்றனர். அங்கு வேலை கிடைக்காததால் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சி.முட்லூர் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த மினி டெம்போ குகன், கலைராஜன் வந்த இருசக்கர வாகனம், அருகே திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முருகன் மகன் அஜித்குமார் (29) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
