தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குப் செல்லத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) காலை 8 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பண்டிகைக்கு முந்தைய நாட்களில் பயணிப்போருக்கான டிக்கெட் விற்பனை அட்டவணையைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 5-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதியும், நவம்பர் 6-ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 7-ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், பண்டிகைக்கு முதல் நாளான நவம்பர் 7-ஆம் தேதி பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை செப்டம்பர் 8-ஆம் தேதி பதிவு செய்யலாம். பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்ப விரும்புவோர், செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் தங்கள் மறுபயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைலில் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் ‘தட்கல்’ மற்றும் சாதாரண முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவது வழக்கம். எனவே, மொபைல் போன் மூலம் விரைவாக டிக்கெட் பெற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
முன்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே, ஐ.ஆர்.சி.டி.சி(IRCTC) செயலியில் லாக்-இன் செய்து, (My Master List) என்ற பகுதியில் பயணிப்போரின் பெயர், வயது மற்றும் அடையாளச் சான்று விவரங்களைச் சேமித்து வைத்துக்கொள்வது அவசியம். டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் இந்த விவரங்களைத் தனியாகத் தட்டச்சு செய்யத் தேவையின்றி, ஒரே கிளிக்கில் விரைவாகத் தேர்வு செய்ய இது உதவும்.
மேலும், பணம் செலுத்தும் கட்டத்தில் நேர விரயத்தைத் தவிர்க்க ஐ.ஆர்.சி.டி.சி வாலேட், யூ.பி.ஐ (IRCTC Wallet, UPI) அல்லது நெட் பேங்கிங் வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இணையதள வேகமும் செயலியின் செயல்பாடும் தடையின்றி இருப்பதை உறுதிசெய்து, காலை 8 மணி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே லாக்-இன் செய்து காத்திருப்பது, எளிதாக டிக்கெட் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்பை உருவாக்கும்.
