சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அசன் மவுலானா வெற்றி பெற்றார். இவர் தேர்தலின்போது தேர்தல் செலவுக் கணக்குகளை முறைப்படி சமர்ப்பிக்காத தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
யார் இந்த அசன் மவுலானா?
* காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அசன் மவுலானா. இவரின் தந்தை ஜே.எம். ஹாரூன் ரஷீத் முன்னாள் பார்லிமென்ட் எம்பி ஆவார்.
* இவர் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள, ஒரு தொழிலதிபர் மற்றும் நில உரிமையாளர் ஆவார். மேலும், இவர் தமிழக இளைஞர் காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுலானா கூறியதாவது: பாஜவுக்கு என் மேல் என்ன காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை; கண்டிப்பாக நீதிமன்றம் செல்வேன். இந்திய நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. என் மீதான நடவடிக்கை பழிவாங்கும் அரசியல், என்றார்.
