மகாபாரத பாணியில் தப்ப முயன்ற இளைஞர்; காவல்துறையினரையே ஆச்சரியப்படுத்திய வாக்குமூலம்

கர்நாடக மாநிலம், சிவமொகா மாவட்டம் பத்ராவதி ஹீட்டா காலனி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (19).  இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நீதிமன்றத்தில்  ஆஜராகாமல் இருந்து வந்ததால் இவருக்கு 3 முறை ஜாமீனில் வெளிவராத முடியாத வாரண்ட் (என்.பி.டபிள்யு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை பத்ராவதி நியூ டவுன் காவல் நிலைய அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர், திலீப்பை மடக்கிப்பிடிக்க முயன்றனர். இருப்பினும், காவல்துறையினரைக் கண்டவுடன் தப்பியோடிய திலீப், அங்கிருந்த அனந்தாபள்ளி அருகே இருந்த குளத்தில் குதித்தார். சேறும், சகதியும் நிறைந்த,  புதர்மண்டிக்கிடந்த அந்த குளத்தில் நீருக்குள் மூழ்கியபடி இருந்த திலீப், அவ்வப்போது வெளியே வந்து மூச்சு விட்டுவிட்டு மறுபடியும் நீருக்குள் மூழ்கிவிடுவார்.   

இந்நிலையில், அந்த குளத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதர் செடிகள் அசைதல் மற்றும் நீர்க் குமிழிகள் தோன்றுதல் போன்றவற்றைக் கண்காணித்த காவல்துறையினர், திலீப் தண்ணீருக்குள் தான் பதுங்கி இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தனர்.   இதையடுத்து, சற்றும் தயங்காமல் நீருக்குள் இறங்கிய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் தலைமைக் காவலர் பிரசன்னா ஆகியோர் புதர்செடிகளுக்குள் ஒளிந்திருந்த திலீப்பை கையும்களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட திலீப்பிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விசாரணையில், ”மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கதையை நினைவில் வைத்தே குளத்திற்குள் பதுங்கினேன்” என திலீப் வாக்குமூலம் அளித்துள்ளார். இது காவல்துறையினர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.   இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்த காவலர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.   

Source link