மருத்துவமனைகளில் மரண ஓலம்! ஆபத்தான கட்டத்தில் 1.8 லட்சம் குழந்தைகள்!. வங்கதேசத்தில் பெருஞ்சோகம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

வங்கதேசத்தில் கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்துள்ள தட்டம்மை நோய் பரவலால், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை குறைந்தது 986 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், தட்டம்மை பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,80,000-ஐத் தாண்டியுள்ளது.

தலைநகர் டாக்காவில் உள்ள முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகளின் வார்டுகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன. நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகி வரும் நிலையில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஏற்கனவே நிமோனியா, சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்குத் தட்டம்மையும் தொற்றிக் கொள்வதால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவர்களின் நிலைமை மேலும் தீவிரமடைகிறது. அதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடும் சேர்ந்து கொள்வது குழந்த உடல்களை நோயெதிர்ப்பு சக்தியற்றதாக மாற்றுகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டங்கள், அதைத் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் 2025-இல் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாகத் தடுப்பூசி முகாம்கள் பெருமளவில் தள்ளிப்போயின. இதன் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் போனதே தற்போதைய பேரழிவுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

தற்போது விடுபட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பிரதமரின் சுகாதாரப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ள போதிலும், பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source link