“நீதிமன்றத்தில் நிரபராதிகள் என்பதை நிரூபிப்போம்” – கே.என். நேரு பேட்டி!

தமிழகத்தில் 10க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (05.09.2026) சோதனை மேற்கொண்டனர்.  அதிலும் குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை  செயலாளருமான கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. இந்நிலையில் இது தொடர்பாக கே.என். நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு விஜிலன்ஸ் அதிகாரிகள் காலை 8 மணிக்கு வீட்டுக்கு வந்தார்கள். வீட்டுக்கு வந்தபோது, ‘டெண்டரில் தவறு நடந்திருக்கிறது. அது சார்ந்து எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறோம். அதனால், வீட்டை சோதனை செய்ய வேண்டும்’ என்று சொன்னார்கள். ‘பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று  சொன்னோம். 

திருச்சியில் உள்ள  வீட்டிலும், சென்னையில் உள்ள வீட்டிலும், என்னுடைய தம்பி அலுவலகத்திலும், உதவியாளர் அலுவலகத்திலும் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி, அங்கிருந்த பொருட்களை எடுத்துப் பார்த்தார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பொருளும் கிடைக்கவில்லை. அதே  சமயம் அலுவலகத்துக்குச் சொந்தமான ஒரு ஃபைல் இருந்தது. அது ஒரு ரொட்டீன் ஃபைல். அதனுடைய ஒரு காப்பியை எடுத்துக்கொண்டார்கள். என்னுடைய தம்பியினுடைய ஒரு புத்தகத்தில் வரவு, செலவு கணக்கு எழுதி வைத்திருந்தார். அதையும் எடுத்துக்கொண்டார்கள். என்னிடம் ஒரு கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். ‘இந்தப் பொருட்கள் என்னென்ன இருந்தன’ என்பது தொடர்பாக என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள். அதுதான் விஷயம். என்னையும் சேர்த்து இன்னும் 12 பேரை ஐடென்டிஃபை செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அவர்கள் ஆய்வு செய்தார்கள். எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு, ஒவ்வொன்றாக எழுதி வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர். நாங்களும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். ‘நீங்கள் எதை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி ஒத்துழைத்தோம். அவர்களும் எல்லாவற்றையும் பார்த்தார்கள். அவர்கள் சொன்ன டெண்டர் விஷயமாக நான் யாரிடமும் பேசியது இல்லை. எதுவும் செய்ததும் இல்லை. ஏற்கனவே நம்முடைய பெயரில் அமலாக்கத்துறையிலிருந்து ஒரு வழக்கு இருக்கிறது. அது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் காரணமாக புதிதாக ஒரு வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்தப் புதிய வழக்கில் வந்து பார்த்தபோது, அவர்கள் எதுவும் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் அலுவலகத்துக்குச் சொந்தமான ஒரு ஃபைல், ஒரு பேப்பர் ஆகியவற்றை மட்டும்தான் எடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு என்ன வழக்கு போடுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே பழைய வழக்கு  நீதிமன்றத்தில் இருப்பதால், அது குறித்து கேட்க முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் வழக்கு போட்டிருக்கிறார்கள். நீதிமன்றம் சென்று நாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபித்து வெளியே வருவோம். அதுதான் சொல்ல முடியும்”எனத் தெரிவித்தார்.

Source link