இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும். அடுத்து, 15, 17 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கும். இந்த மூன்று போட்டிகளும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில், டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த நான்கு பேரில், எந்த மூன்று பேருக்கு டாப் ஆர்டரில் இடம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
குறிப்பாக, ஒன்டவுன் இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் இருவரில் ஒருவரை ஆட வைக்கதான், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில், துலீப் டிராபியில் ஈஸ்ட் ஜோன் அணியை வழிநடத்தும் இஷான் கிஷன், அந்த அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி குறித்து பேட்டிகொடுத்தார். அப்போது பேசிய கிஷன், ‘‘முகமது ஷமிக்கு 36 வயதாகிவிட்டது என்பதற்காக அவரை ஒதுக்க கூடாது. அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும்’’ என பேசினார்.
இதுதான், தற்போது கம்பீருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஷமிக்கு அதிக வயதாகிவிட்டது எனக் கூறி கம்பீர்தான் இவரை நீக்கினார். இவருக்கு மாற்றாக பிரசித் கிருஷ்ணாவுக்கு ரெகுலர் வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது கம்பீரின் இந்த முடிவை இஷான் கிஷன் விமர்சித்து பேசியிருப்பது, கம்பீருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில், ஒன்டவுன் இடத்தில் சஞ்சு சாம்சனை ஆட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்ல, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் முடிந்தப் பிறகு, பிரம்சிம்ரன் சிங்கை சேர்க்க முடிவு செய்துள்ளாராம். இந்திய அணி டாப் ஆர்டரில் அனைவரும் இடது கை பேட்டர்களாக இருப்பது, அணிக்கு பின்னடைவாக இருக்கும் நிலையில், சாம்சன், பிரப்சிம்ரன் சிங் ஆகிய வலது கை பேட்டர்களை டாப் ஆர்டரில் கொண்டு வந்தால், அது அணிக்கு நல்ல விஷயமாகதான் இருக்கும். இதனால், இஷான் கிஷனை இனி சேர்க்க வேண்டாம் என கம்பீர் கூறினால், அதனை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஏற்கனவே, 2023ஆம் ஆண்டு கடைசியில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிந்ததும், அதிருப்தியில் இந்தியா வந்துவிட்டார். மேலும், ரஞ்சிக் கோப்பையில் ஆட சொன்னதற்கு, எனக்கு மனதளவில் பிரச்சினை இருக்கிறது எனக் கூறிவிட்டு, அவர் ஐபிஎலுக்கு பயிற்சியை மேற்கொண்டார். இதனால், கடும் அதிருப்தியடைந்த பிசிசிஐ, அவரை ஒரு வருடம் வரை அணியில் சேர்க்கவே இல்லை. இந்நிலையில், தற்போது கம்பீரை கோபம் ஏற்றும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மேலும், இஷான் கிஷன், சமீப காலமாகவே டி20 பார்மெட்டில், அரை சதம் அடிக்க 30+ பந்துகளை எடுத்துக் கொள்கிறார். இதுவும், அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், இனி சாம்சனுக்குதான் ரெகுலராக ஒன்டவுன் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
