சென்னை: ‘உலகத்தின் பொதுச்சொத்து தினமலர். எந்தக் காலத்திலும் இந்த உண்மை மாறாது,’ என்று தினமலர் நாளிதழின் பவள விழாவில் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அரங்கில் தினமலர் நாளிதழின் 75ம் ஆண்டு பவள விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும், தமிழக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக எம்எல்ஏ சவுமியா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தவெக நிர்வாகி வைகைச் செல்வன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கே.ஜி. மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பக்தவத்சலம் உள்பட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் 75ம் ஆண்டு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
உத்தரவாதம்
இந்த நிகழ்ச்சியின் துவக்க உரையை மூத்த பத்திரிகையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரங்கராஜ் பாண்டே பேசியதாவது; நான் சாணக்யா ரங்கராஜ் பாண்டே கிடையாது. தினமலர் உடைய ரங்கராஜ் பாண்டே. இதுதான் என்னுடைய தாய் வீடு. இங்கிருந்து தான் பிறந்து, வளர்ந்து, ஆளாகி, ஒரு அடையாளமாக இன்றைக்கு உங்க முன்னாடி நான் நிற்கிறேன். ரங்கராஜ் பாண்டேவை யாராவது ஒரு 4 பேருக்கும் தெரியும் என்றால், அது இந்த தாய் வீடு தினமலர் தான் என்னை வளர்த்து விட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்த வீட்டோட குழந்தையாகவே, மதுரை, சேலம், சென்னையில் எல்லாம் இருந்தேன். அரங்கில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
இந்த அரங்கில் முன்பு இருந்திருக்கும் ஒவ்வொருவருமே மேடையில் சிறப்பு விருந்தினர்களாக இருப்பதற்கான தகுதியானவர்கள். அவ்வளவு பெருமக்களும் எங்களுக்காக வந்திருப்பது என்பது தினமலருடைய மிகப்பெரிய கவுரவம். நாங்கள் எப்போதும் நன்றிக்கடனும் உங்களுக்காக இருப்போம். எங்களுடைய அன்பும், மரியாதையும் தினமலர் சார்பாக எப்போதும் உங்களுக்காக உண்டு. சரியான செய்திகளை தொடர்ந்து கொடுப்பதில், தினமலர் தொடர்ந்து பாடுபடும் என்ற உத்தரவாதத்தை, அந்தக் குடும்பத்தின் கடைசி பிள்ளை என்ற அடிப்படையில் நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன், இவ்வாறு கூறினார்.
கடந்து வந்த பாதை
தொடர்ந்து தினமலர் கடந்து வந்த பாதைகள் குறித்து நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே பேசியதாவது; ‘மெட்ராஸ் ராஜதானி’ அல்லது ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ என்பது தான் அப்போது நமது மாநிலத்தின் பெயர். மெட்ராஸ் தான் தலைநகர். அங்கே என்ன செய்தி உற்பத்தியாகிறதோ, அது பத்திரிகைகளில் வரும். அதைத் தவிர லண்டனில் மேன்மை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணி, யாருக்கு தரிசனம் தந்தார், பட்டம் வழங்கினார் என்பது எல்லாம் வரும். அதேபோல, இந்தியாவில் பார்லியில் இருசபைகளிலும் முக்கியமாக ஏதாவது பேசப்பட்டிருந்தால், அது செய்தியாக இடம்பெறும். அநேகமாக பிரதமர் நேரு என்ன சொன்னார், எங்கே போனார் என்பதும், அரசாங்கத்தின் உத்தரவுகளும் செய்தியாக வரும். மெட்ராஸ் சட்டசபையில் நடந்த சங்கதிகளும் செய்தியாக வரும். அவ்வளவு தான். பத்திரிகைகளில் அவ்வளவு தான் வரும். அப்போது, இப்போது நீங்கள் பார்ப்பது போல 20, 30 பக்கங்களில் செய்திகள் எல்லாம் கிடையாது. தினசரி பத்திரிகைகளே 4 அல்லது 5 பக்கங்களில் தான் வரும். ஒரு நியூஸ் ப்ரிண்ட் வாங்குவதற்கே, அரசாங்கக் கோட்டா உண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பூத்தது தான் தினமலர். எல்லா நதிகளும் வடக்கிருந்து, தெற்கே பாயும் போது, தெற்கிருந்து வடக்கே ஒரு நதி பாயத் துணிந்தால், அதை என்ன நினைப்பீர்கள். தமிழ் பத்திரிகையான தினமலர், உதயமானது இன்றைய கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் தான். எதற்காக?
மலையாள மண்ணில் ஒலித்த தமிழர் குரல்
அங்கே ஒரு ஆட்சி நடந்தது. அது தமிழர்களை வதைத்தது. திருவிதாங்கூர் சமாஸ்தானம் என்று சொல்லப்பட்ட அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பல லட்சம் தமிழர்கள் தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளானார்கள். சென்னையில் இருந்து பிரசுரித்த எந்த நாளிதழும் அது பற்றி செய்தி வெளியிடவில்லை. அப்போது தான், டி.வி.ராமசுப்பையர் என்கிற சுதந்திர போராளி, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, திருவனந்தபுரத்திற்கு சென்று தினமலர் என்ற தமிழர் குரலை துவங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி ஒலிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் நாளிதழ் தினமலர். அரசாங்கமே அடக்குமுறையில் ஈடுபட்டால் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. முரட்டுத்தனமான நடவடிக்கைகள் தினமலர் மீது பாய்ந்தன.
அது வெளிவராமல் தடுப்பதற்கு சட்டத்தின் அத்தனை கரங்களும் பிரயோகிக்கப்பட்டன. எதற்கும் அசரவில்லை தினமலர். கையில் தினமலர் வைத்திருந்தாலே கைது செய்வார்கள் என்பதைத் தெரிந்தும், தினமலரை வாங்கி பனை மரத்தின் மீது ஏறி படித்தனர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள். தமிழ் மக்களின் இத்தகைய ஆதரவு இருக்கும் போது, தினமலர் ஏன் அரசுடன் சமரசம் செய்யப் போகிறது. மகத்தான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், திருவிதாங்கூர் சமஸ்தானம், கன்னியாகுமரி என்கிற இந்தியாவின் தென்கோடி நிலப்பரப்பை தாய் தமிழகத்துடன் இணைக்க சம்மதித்தது.
மக்களின் விருப்பமாக…
வந்த வேலை முடிந்தது என்று ஓய்வெடுக்காமல், அடுத்த வேலையைப் பார்க்க தமிழகம் திரும்பியது தினமலர். சென்னைக்கு செல்லுமாறு நலம் விரும்பிகள் வலியுறுத்தினார்கள். சென்னையில் பெரிய பத்திரிகைகள் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் மற்ற பகுதி மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் தெரிவிக்கத் தான் யாருமில்லை என்பது ராமசுப்பையர் உணர்ந்திருந்தார். ஆகவே, புதிதாக சேர்ந்த கன்னியாகுமரியை அடுத்துள்ள திருநெல்வேலியில் தடம் பதித்தார். தமிழகத்தில் தினமலரின் முதல் பதிப்பு திருநெல்வேலியில் ஜனித்தது.
ஏனைய பத்திரிகைகள் பார்லியையும், சட்டசபையையும் மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபடுகின்றன. நாம் அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை பார்லிக்கும், சட்டசபைக்கும் கொண்டு சேர்க்க தீர்மானித்தது தினமலர். இந்திய நாளிதழ் வரலாற்றில் இன்றளவும் பிரம்மிப்புடன் விவாதிக்கப்படும் அத்தியாயம் ஒன்று உண்டு. பெரிய பத்திரிகைகள் 4 மாவட்டத்திற்கு ஒரு நிருபர் வீதம் நியமித்துக் கொண்டிருந்த போது, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் பகுதிநேர நிருபரை நியமித்தது தினமலர். அவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் பெருமக்கள். சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள், உண்மை பேச அஞ்சாதவர்கள். பணத்திற்காக அல்லாமல், சமூக பொறுப்பிற்காக கடமை ஆற்றும் ஆர்வலர்கள்.
தினமலரின் அர்ப்பணிப்பு
ஊருக்கு செல்ல சாலையில்லை, சாலையிருந்தால் பஸ் இல்லை. பிள்ளைகள் எப்படி பள்ளிக்குச் செல்வது, பள்ளி இருந்தால் ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர்கள் இருந்தால் கழிப்பறை இல்லை. மாணவர்கள் எங்கே போவது? இந்த ரீதியில், பாலம் இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, தொழில் இல்லை, வேலை இல்லை, விவசாயம் இல்லை, மயானம் இல்லை என்று எல்லா இல்லைகளையும் எல்லையே இல்லாமல் மீண்டும் மீண்டும் செய்தியாக்கி, ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தூண்டுதலாக நின்றது தினமலர்.
தினமலர் பிரதானமாக கையில் எடுத்தக் கொள்கை, அனைவருக்கும் கல்வி, குடிநீர், போக்குவரத்து, தொழில், விவசாயம், மின்சாரம். ஒரு அரசாங்கம் எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டுமோ, அவை அனைத்தையும் உள்ளடக்கிய சமூக பொருளாதார கட்டமைப்பை தமிழகத்தில் நிர்மாணிக்க தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது தினமலர். அத்தகைய உன்னதனமான குறிக்கோளை அடைய, தினமலர் மேற்கொண்ட சில பயணத்தில் தடங்கல்கள், எதிர்ப்புகள் ஏராளம். ஆனால், எத்தனை நெருக்கடி வந்தாலும், அது பாதை மாறவில்லை.
உலகின் பொதுச்சொத்து
அரசாங்கங்கள் முழு வலுமையோடு ஒடுக்க முயன்ற போதிலும், தினமலர் பணிந்தது இல்லை. மனதார ஆதரித்த சில சமூக குழுக்கள் எல்லாம், சுய லாபம் கருதி விலக முயன்ற கட்டங்களிலும் தினமலர் இறங்கி வரவில்லை. சொல்லப்போனால், தினமலரை ஏதாவது ஒரு காலகட்டத்தில் கண்டிக்காத தமிழர்கள் இல்லை. அவை தற்காலிக ஊடல்கள் தான் என்பது வரலாறு. ஏனெனில், தினமலர் என்றென்றும் உண்மையின் உரைகல். அதை விமர்சிக்கலாம், அது உங்கள் உரிமை. ஆனால், அதன் தூய்மையான நோக்கத்தை நீங்கள் சந்தேகிக்க முடியாது. தினமலரை விட்டு விலகவும் முடியாது. ஏனெனில் தினமலர் உலகத்தின் பொதுச்சொத்து. எந்தக் காலத்திலும் இந்த உண்மை மாறாது. அப்போதும், இப்போதும், எப்போதும். இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்து
பவள விழாவை எட்டியுள்ள தினமலர் நாளிதழை வாழ்த்தி, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை ரங்கராஜ் பாண்டே மேடையில் வாசித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில்; திரு.டி.வி. ராமசுப்பையர் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த தினமலர், ஒரு வளர்ந்த ஆலமரத்தில் விழுதுகள் தரையில் ஊன்றி தாங்கி நிற்பது போல, அண்ணாரின் புத்தரர்கள் மூலமாக எழுத்திலும், எண்ணத்திலும், காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுடன், தமிழகத்திலும், இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் பரவி, அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்த தினமலர் நாளிதழின் செய்தித்தொடர்பு தொண்டானது, நல்ல விதமாக, மென்மேலும் வளர்ந்து, தொடர்ந்து நடைபெற, ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கிருபையுடன் ஆசிர்வதிக்கிறோம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிருங்கேரி சாரதா பீடத்தின் 37வது சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள் அவர்களின் அருளாசி; கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் செய்த உபதேசத்தின் தாத்பரியத்தை ஜகத்குரு ஆதிசங்கரர் தனது பாஷ்யங்களில் விவரித்து கூறியுள்ளார். அதில், பயமில்லாத தன்மை (அபயம்), மனத்தூய்மை (சத்வ சம்ஸூதி ) உடன் இருந்து பிறரை ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் முதலியவற்றை தவிர்த்தல், எப்போதும் நேர்மையும் இருத்தல் (ஆர்ஜவம்) என்று விவரிக்கிறார். மேற்கூறிய நல்ல குணங்கள் மனிதர்கள் அனைவருக்கும் மிகவும் தேவையானவை. அதேபோல, மனித சமுதாயத்திற்கு செய்திகளை தெரிவிக்கும் நல்ல பத்திரிகைகளுக்கும் இந்த குணங்கள் பொருந்தியிருக்க வேண்டும் என்பதை தனியாக கூற வேண்டியதில்லை. ஸ்ரீ சாரதா சந்திரமௌலீஸ்வரர் அனுகிரகத்தாலும், எங்களின் குருநாதர் கிருபையாலும் தினமலர் பத்திரிகை, மேற்கூறிய குணங்களுடன் மக்கள் சேவையில் இன்னும் சிறப்பாக பன்னெடுங்காலம் விளங்கட்டும் என்றும் எங்களின் ஆசிர்வாதங்களை வழங்குகிறோம், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி; தலைமுறைகள் கடந்து, வாசகர்களுடன் பயணித்து வரும் தினமலர் நாளேட்டின் பவள விழாவான இன்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுவதும், இந்த இனிய நிகழ்வு கருணாநிதியால் வடிவமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுவதும் சிறப்புக்குரியது. அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் பக்கம் நின்று, உண்மைகளை எடுத்துச்சொல்லும் பணியை தினமலர் தொடர்ந்து மேற்கொள்ள திமுக சார்பில் வாழ்த்துகிறேன், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.
