2029-ல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: புதுச்சேரியில் வைத்திலிங்கம் எம்.பி அதிரடி பிரகடனம்

தமிழக முதலமைச்சர் விஜய் தனது சிஷ்யன் என்றும், தங்களின் உருவாக்கம் தான் விஜய் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறி வருவதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம் எம்.பி, புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாநில அந்தஸ்து மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. புதுச்சேரியில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் மாநாடு மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழக முதலமைச்சர் விஜய்யும் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை; அதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை. தமிழக முதலமைச்சர் விஜய் தன்னுடைய சிஷ்யன் என்றும், தங்களின் உருவாக்கம்தான் விஜய் என்றும் ரங்கசாமியும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

இப்போது இருக்கும் சூழலிலேயே காவிரி நதிநீரைப் புதுச்சேரிக்குக் கொண்டு வராத முதலமைச்சர் ரங்கசாமி, வேறு எப்போது அதைக் கொண்டுவரப் போகிறார்? மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் முதலமைச்சர் ரங்கசாமி அத்தொகுதியைத் தவெக-விற்கு விட்டுக் கொடுப்பார்; தேவைப்பட்டால் வேட்பாளரைக் கூட அவரே தேர்வு செய்து கொடுப்பார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்பது தெரிந்திருந்தும், அதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக முதலமைச்சர் ரங்கசாமி நகைச்சுவை செய்து வருகிறார். வலி எடுக்கும் போது மருந்து தடவுவது போல, அவருக்கு எப்போதெல்லாம் அரசியல் ரீதியாகத் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மாநில அந்தஸ்தைப் பற்றிப் பேசி வருகிறார்.

இந்தியாவிலேயே மிக மோசமான சட்டமன்றம் புதுச்சேரி சட்டமன்றம்தான். இங்கு ஆட்சி அதிகாரம் முழுவதும் அமைச்சர் நமச்சிவாயம் கையில் மட்டுமே உள்ளது. சட்டப்பேரவையில் யார் ஆளுங்கட்சி, யார் எதிர்க்கட்சி என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய திமுகவினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். மொத்தத்தில், மாமனார் ரங்கசாமிக்கும் மருமகன் நமச்சிவாயத்திற்கும் இதுவரை ஹனிமூன் முடியவே இல்லை என்றார்.

செய்தி:  பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Source link