பயணிகளுக்கு விரைவான, நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கி வருவதால், இதில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மெட்ரோ ரெயில்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
தொடக்க காலத்தில் 10,000, 15,000, 50,000 என இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை பெருநகரத்தில் நெரிசல் இல்லாத சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வழங்கி வருகிறது.
அதேசமயம் மெட்ரோவில், ஹெட்ஃபோன் இன்றி ஸ்பீக்கர் மோடில் பாட்டு கேட்பது அல்லது சத்தமாகப் பேசுவது, போதைப்பொருட்கள் மற்றும் சீல் வைக்கப்படாத மதுபானங்களை கொண்டு செல்வது, மீன் மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
