நீண்ட தூர ரயில் பயணத்தின் போது சரியான படுக்கையைத் (Berth) தேர்ந்தெடுப்பது பயணத்தை மிகவும் சௌகரியமானதாக மாற்றும். தூக்கம், தனிமனித சுதந்திரம் (Privacy) மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் மேல் படுக்கை (Upper Berth) மற்றும் கீழ் படுக்கை (Lower Berth) இரண்டில் எது சிறந்தது என்பதை பார்ப்போம்.
நீண்ட தூர ரயில் பயணம் பல நேரங்களில் சோர்வை ஏற்படுத்தக்கூடியது; குறிப்பாக இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காதபோது இன்னும் சிரமமாகிவிடும். சிலர் ரயிலில் ஏறிய உடனே தூங்கிவிடுவர்; ஆனால் பலரோ, பெட்டிக்குள் நிலவும் தொடர் நடமாட்டம் மற்றும் சத்தங்களுக்கு மத்தியில் சௌகரியமாகத் தூங்க முடியாமல் தவிப்பார்கள். இத்தகைய பயண அனுபவத்தைத் தீர்மானிப்பதில் நாம் தேர்வு செய்யும் படுக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. சிலர் தங்களுக்குப் பழக்கமான படுக்கையையே எப்போதும் விரும்புவார்கள், சிலரோ அதை விதிக்கு விட்டு விடுவார்கள். ஆனால், நீண்ட பயணத்தில் நல்ல தூக்கத்தைப் பெற அப்பர் பெர்த்தா அல்லது லோயர் பெர்த்தா, எது சிறந்த தேர்வு?
‘அப்பர் பெர்த்’ (Upper Berth)
எந்தவித இடையூறும் இன்றி நிம்மதியாகத் தூங்குவதை முதன்மையாகக் கருதும் பயணிகளுக்கு அப்பர் பெர்த் சிறந்த தேர்வாகும். பிரதான இருக்கை பகுதிக்கு மேலே அமைந்திருப்பதால், ரயில் பெட்டியின் மற்ற பகுதிகளிலிருந்து சற்றே தனிமைப்படுத்தப்பட்டு, சிறந்த பிரைவசியை இது வழங்குகிறது. குறிப்பாக ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில், அமைதியான தூக்க சூழலை அப்பர் பெர்த் தருகிறது.
படுக்கையைச் சுற்றி மற்றவர்களின் நடமாட்டம் இருக்காது என்பதால், ரயிலில் ஏறுபவர்கள், இறங்குபவர்கள், நடைபாதையில் நடப்பவர்களால் ஏற்படும் தொந்தரவுகள் இதில் மிகக் குறைவு. கீழே அமர்ந்திருப்பவர்களின் தொடர் பேச்சுகளும் செயல்பாடுகளும் மேல் படுக்கையை அவ்வளவாகப் பாதிக்காது. எனவே, பயணம் முழுவதும் படுத்துக்கொண்டே நிம்மதியாக உறங்கிச் செல்ல நினைக்கும் தொடர் பயணிகளுக்கு அப்பர் பெர்த் வசதியான வாய்ப்பாகும்.
‘லோயர் பெர்த்’ (Lower Berth)
எளிதான நடமாட்டம் மற்றும் சௌகரியத்தை விரும்புபவர்கள் பொதுவாக லோயர் பெர்த்தையே விரும்புகின்றனர். அப்பர் பெர்த்தைப் போல இதில் ஏணி வழியாக மேலே ஏற வேண்டிய அவசியமில்லை என்பதால், எளிதாகப் படுக்கையில் அமரவும் இறங்கவும் முடியும். கழிவறையைப் பயன்படுத்த, கால்களை நீட்டி அமர அல்லது பயணத்தின் போது பைகளில் உள்ள பொருட்களை எடுக்க நினைத்தால் லோயர் பெர்த் மிகவும் வசதியானது. நள்ளிரவில் யாருக்கும் இடையூறு செய்யாமல் அல்லது மேலிருந்து கீழே இறங்கும் சிரமமின்றி எழுந்து நடமாட முடியும்.
முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் ஏறி இறங்குவதில் சிரமம் உள்ள பயணிகளுக்கு லோயர் பெர்த் மிகவும் ஏற்றது. தங்களது உடமைகளை அருகிலேயே வைத்துக்கொள்ள விரும்பும் பயணிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக இரவு நேரப் பயணங்களில் உடமைகள் அருகிலேயே இருப்பது மனநிம்மதியை தரும். அதேபோல இறங்க வேண்டிய ரயில் நிலையம் வரும்போது, மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மேலிருந்து இறங்கும் சிரமமின்றி எளிதாக ரயிலை விட்டு இறங்கிவிட முடியும்.
தற்போது பயணிகள் படுக்கைகளில் சௌகரியமாகத் தூங்குவதற்காக கூடுதல் ஃபோம் மெத்தைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மேல் படுக்கை ஏறுவதற்கு ஏதுவாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான ரயில்களை விட ஒவ்வொரு படுக்கையிலும் உடைமைகளை வைப்பதற்கும் கால்களை நீட்டி வைப்பதற்கும் கூடுதல் இடம் வழங்கப்பட்டுள்ளது.
எது சிறந்த தேர்வு?
சுலபமாக இறங்கி வர வேண்டும், வசதியும் தடையற்ற நடமாட்டமும் வேண்டும் என்றால் லோயர் பெர்த் சிறந்த தேர்வாக அமையும். அதே நேரத்தில், எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியான உறக்கம் மட்டுமே தேவை என்பவர்களுக்கு அப்பர் பெர்த் முன்னுரிமை பெறுகிறது. சுருக்கமாகச் சொன்னால், இரு படுக்கைகளுக்கும் தனித்துவமான சிறப்புகள் உண்டு; தனிப்பட்ட விருப்பம் மற்றும் உடல் வசதியைப் பொறுத்தே எது சிறந்தது என்பது அமைகிறது.
