நமது நிருபர்
நேபாள வெள்ளத்தில், மாயமான தமிழர்களை கண்டறியும், டி.என்.ஏ., பரிசோதனைகளை தமிழக அரசு ஏற்பாடு செய்த நிலையில், தஞ்சாவூரில் மாயானவர்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் டி.என்.ஏ., பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
நேபாளத்தில், கடந்த ஆக.26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
இருப்பினும்,வெள்ளத்தில் மாயாமனவர்களை அடையாளம் கண்டறிய நேபாள அரசு டி.என்.ஏ., பரிசோதனை தரவுகளை கேட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தடய அறிவியல் மூலம் டி.என்.ஏ., பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து இருந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவம் மற்றும் நஞ்சியியல் துறை பிரிவு டாக்டர் தமிழ்மணி, மருத்துவக்கல்லுாரி முதல்வர் மணிமேகலை, தஞ்சாவூர் மண்டல தடய அறிவியில் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் அடங்கிய குழுவினர் உதவியுடன் தஞ்சாவூர், மயிலாடுதுறை,கரூர்,திருச்சி,திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 23 பேரின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ.,பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த ரத்தமாதிரி சேகரிப்பு பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறுகையில், ”முதற்கட்டமாக 23 பேரின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் தகவலறிந்து வரும்பட்சத்தில் இரண்டு நாட்கள் ரத்தமாதிரிகளை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிக்கை ஒரு வாரத்தில், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, நோபாள் மற்றும் சீனா நாட்டிற்கு ஆன்லைன் மூலம் தெரிவிக்கப்படும்,” என்றார்.
கலெக்டர் ரேவதி கூறுகையில், ”தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. இருப்பினும், அவர்களின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளேன். இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் நேபாள அரசுக்கு அனுப்பப்பட்டு, டி.என்.ஏ., ஒத்து போனால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார்.
