241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

30 இடங்களில் 7 மணி நேர சோதனை

தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கே.என்.நேரு தொடர்பான 30 இடங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனையானது பிற்பகல் 3 மணி வரை சுமார் 7 மணி நேரம் நீடித்தது.

சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதேபோல், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் 4 வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

241 ஆவணங்கள் பறிமுதல் – 12 பேர் மீது வழக்கு

இன்று நடத்தப்பட்ட இந்த தீவிர சோதனையில், கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் இருந்து 241 ஆவணங்களும், மின்னணு சாட்சியங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி அளவிலான டெண்டர் ஊழல் தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கே.என்.நேருவின் சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் உள்பட 12 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல்வேறு நிறுவனங்களிடம் சட்டவிரோதமாகக் கட்சி நிதி (Party Fund) கேட்டு மிரட்டி வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் கண்டனம் 

கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கையை த.வெ.க அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்து, சட்டப்பேரவை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில், வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும் கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் என்று குறிப்பிட்டிருந்தார்.



Source link