“கேரள மாநில அரசுக்கு நன்றி” – முதல்வர் விஜய்!

கேரளம் மாநிலம், கைப்பமங்கலம் அருகே திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், “திண்டுக்கல் மாவட்டம், தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த எட்டு மாணவர்கள் நேற்று (04.09.2026) காரில் கேரளம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.  

இந்நிலையில், இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் எட்டு மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன். உயிரிழந்த எட்டு மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர, அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் விரைவுபடுத்தத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இப்பணிகளை ஒருங்கிணைக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் உடனடியாக திருச்சூருக்கு அனுப்பப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து, உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது அதோடு , அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின் திருச்சூர் மாவட்ட ஆட்சியரால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செயல்முறையை விரைவுபடுத்தி தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை தமிழ்நாட்டிலுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிய கேரளம் மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link