முந்தைய பில் மதிப்பீட்டைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமாக மின் கட்டணம் இருந்தால் பில் தானாகவே தடுத்து நிறுத்தி வைக்கப்படும் என மின்சார வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை கணக்கிடும் முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஏராளமான புகார்கள தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. அதோடு, இதுதொடர்பாக சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மின்சாரத் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு யூனிட்டுக்கும் கணக்கிடப்படும் மின் கட்டணத்தில், முந்தைய மாதத்தைவிட அதிகமாக கட்டணம் கணக்கிடப்பட்டிருந்தால், குறிப்பாக 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த பில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின் இணைப்பை 3 நாட்களுக்குள் ஆய்வு செய்து, கட்டணத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்வார்கள். அதன் அடிப்படையில், புதிய மின் கட்டணம் கணக்கிட்டு அறிவிக்கப்படும் மேலும் கடந்த ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய விட்டு நுகர்வோர்களும் கண்காணிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
