சட்டம் பயின்றவர்கள் நேர்மையான வழியில் நல்ல பெயரை எடுங்கள்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அட்வைஸ்

விழுப்புரம்: ”சட்டக்கல்லுாரி படிப்பை முடித்த மாணவர்கள், நேர்மையான வழியில் நல்ல பெயரை எடுக்க வேண்டும்,” என, ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில் நடந்த 2வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நம்மிடம் கடின உழைப்பு, விடாமுயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்கள் இலக்கை மனதார நேசிக்க வேண்டும். வழக்கறிஞர் தொழிலில் பொறுமை அவசியம், எந்தவொரு குறுக்கு வழியையும் கையாளாமல் பயணிக்க வேண்டும்.

வெற்றி உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு போய்விடும். சில நல்ல பண்புகளை நீங்கள் கடைபிடித்தால் உங்களுக்கு வாழ்வில் தோல்விக்கு வாய்ப்பே இல்லை. அறிவை தொடர்ந்து வளர்த்து கொண்டால் பணத்தை பற்றி எந்த கவலையும் வராது.

தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்யுங்கள். புத்தகம் வாசிப்பதிலும், இலக்கிய உலகிலும் ஆர்வத்தை காட்டுங்கள். தற்போதைய காலகட்டத்தில் திரையுலகு, சோசியல் மீடியா ஆகிய எதிலும் மூழ்காமல் நிஜ உலகத்தில் மனிதர்களோட ஆழமான உறவுகளை வளர்த்து கொள்ளுங்கள்.

நம் அனைவருக்கும் மொழிப்பற்று இருக்க வேண்டும். நமது மொழி மிகவும் தொன்மையானது. தமிழை நம் தாய்மொழியாக பெற்றிருப்பதற்கு, பெருமைப்பட வேண்டும். நேர்மையான வழியில் நின்று நல்ல பெயரை எடுங்கள். நீதிமன்றம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link