தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகினார். இதற்கிடையே அவருக்கு, அக்கட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகியோர் வேலை வாங்கி தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த மே 31ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூன் 1ஆம் தேதி இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் பால சுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகிய இருவருக்கு மட்டுமே இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புகார் அளித்த பெண்ணும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சமரசமாகச் செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இருதரப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அதன்படி இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், புகார்தாரரும் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சமரசமாகச் செல்ல விரும்பும் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் தவெக முன்னாள் பெண் நிர்வாகி தொடர்பான கூட்டுப் பாலியல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
