இந்திய அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: 55 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

துபாய்: ஆசிய கோப்பை ‘டி-20’ தொடரில் இந்திய பெண்கள் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் ஆசிய கோப்பை, ‘டி-20’ தொடர் நடக்கிறது. ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா (ஐ.சி.சி., ரேங்க் ‘நம்பர்-௩’), பாகிஸ்தான் (‘நம்பர் – ௮’) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

‘ஸ்பின்னர்’ சாகசம்: இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சில், பாகிஸ்தான் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. ஷபாலி வர்மா பந்தில் முனீபா அலி (13) போல்டானார். ‘சுழலில்’ மிரட்டிய ஸ்ரீ சரணி ஓவரில் (6வது) பெரோசா (0), ஷவால் (14) வெளியேறினர். சரணியின் அடுத்த ஓவரில் ஆயிஷா (2) அவுட்டானார். சதாப் (3) சோபிக்கவில்லை. தீப்தி சர்மா பந்தில் கேப்டன் பாத்திமா சனா (0) எல்.பி.டபிள்யு., ஆனார். 10 ஓவரில் 36/6 ரன் எடுத்து தத்தளித்தது. எய்மான் (5) ரன் அவுட்டானார். பிரேமா ராவத் வலையில் ‘டெயிலெண்டர்கள்’ சிக்கினர். பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 55 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி, பிரேமா ராவத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

திணறல் துவக்கம்: எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி துவக்கம் கொடுத்தது. சாடியா வீசிய முதல் பந்தில் சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் ஷபாலி. 2வது ஓவரை வீசினார் பாத்திமா சனா. 2வது பந்தில் பவுண்டரி அடித்த ஷபாலி (12) அடுத்த பந்தில், பாத்திமாவிடம் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். கடைசி பந்தில் பிரதிகா (4) வீழ்ந்தார். ஸ்மிருதி மந்தனா, 9 ரன்னில் வெளியேறினார். இந்தியா 29/3 என திணறியது.

பின் வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா அசத்தினர். ஹர்மன்பிரீத் கவுர் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 8.4 ஓவரில் 57/3 ரன் எடுத்து வென்றது. ஏற்கனவே தாய்லாந்து, ஹாங்காங்கை சாய்த்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் (18), தீப்தி (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஷபாலி 3000 ரன்

இந்தியாவின் ஷபாலி வர்மா நேற்று 7 ரன் எடுத்த போது, சர்வதேச ‘டி-20’ அரங்கில் 3000 ரன் மைல்கல்லை எட்டிய இளம் வீராங்கனை (22 வயது, 220 நாள்) ஆனார். 114 போட்டியில் 3005 ரன் எடுத்துள்ளார். அடுத்த 3 இடத்தில் அயர்லாந்தின் கேபி லீவிஸ் (24 வயது, 347 நாள்), எமிரேட்சின் ஈஷா (27 வயது, 139 நாள்), ஸ்மிருதி மந்தனா (27 வயது, 171 நாள்) உள்ளனர்.

* ஸ்மிருதி மந்தனாவுக்கு (4681) அடுத்த இந்த இலக்கை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை ஷபாலி.

Source link