சென்னை – டெல்லி சரக்கு ரயில் சேவை: காஸ்ட்லியான லாரி சர்வீஸ்- தெற்கு ரயில்வே திட்டம் என்ன? – chennai to delhi cargo trains lacking to manage export with costly lorry service

தென்னிந்தியாவை வட இந்தியா உடன் இணைக்கும் முக்கிய ரயில் பாதையாக சென்னை – டெல்லி வழித்தடம் திகழ்கிறது. இதன் வழியாக இயக்கப்படும் சரக்கு ரயில்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு – டெல்லி இடையில் புதிய சரக்கு ரயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இது சுமார் 7 நாட்கள் பயணித்து 2,500 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. வழக்கமான சரக்கு ரயில்களை காட்டிலும் விரைவாக சென்று 30 சதவீத நேரத்தை மிச்சப்படுத்துகிறது. பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டு ரயில் நிலையத்தில் புறப்பட்டு சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை வருகிறது. இங்கு கூடுதல் பெட்டிகளை இணைத்து கொண்டு டெல்லி புறப்பட்டு செல்கிறது.

சென்னையில் இருந்து தினசரி சரக்கு ரயில்கள்

தற்போது சென்னையில் இருந்து ஒன்று முதல் 3 சரக்கு ரயில்கள் டெல்லி செல்கின்றன. இதுதவிர வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் உள்ள பார்சல் வேன்கள் மூலமும் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றின் மூலம் கார் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஜவுளி, மின்னணு சாதனங்கள், டயர்கள், ரப்பர் பொருட்கள், பழங்கள், விவசாய பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த வழித்தடத்தில் அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் மட்டும் சென்னை கோட்டத்தில் 1,290 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

லாரிகள் ரொம்ப காஸ்ட்லி சர்வீஸ்

ஒட்டுமொத்த தெற்கு ரயில்வேக்கும் 3,500 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஆண்டு வருமானம் கிடைக்கிறது. குறிப்பாக சென்னை – டெல்லி வழித்தடத்தில் மட்டும் ஆண்டிற்கு சுமார் 250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சரக்கு ரயில் சேவையில் சென்னை – டெல்லி இடையிலான ரயில்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் தெற்கு – வடக்கு சரக்கு ரயில் சேவையில் லாரிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிகப்படியான நேரம் மற்றும் செலவை ஏற்படுத்துகின்றன.

தெற்கு ரயில்வே கூடுதல் சரக்கு ரயில்களை இயக்குமா?

சரக்கு ரயில்களுக்கான கட்டணத்தை காட்டிலும் லாரிகளில் சுமார் 30 சதவீதம் வரை அதிக செலவாகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண கூடுதல் சரக்கு ரயில் சேவைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர். இந்த சூழலில் தெற்கு ரயில்வேயின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விசாரிக்கையில், மூன்று முக்கியமான விஷயங்களை முன்வைத்தனர்.

சென்னை கோட்ட சரக்கு முனையங்கள் அப்கிரேட்

வடக்கு – தெற்கு பிரத்யேக சரக்கு ரயில் பாதையை கட்டமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விஜயவாடாவில் இருந்து இட்டார்சி வழியாக சென்னை – டெல்லி பாதையை இணைக்கும் வகையில் சரக்கு ரயில் பாதை திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டிற்கு வந்தால் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சரக்கு ரயில்களை இயக்க முடியும். சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சிங்கப்பெருமாள்கோவில், காட்பாடி, கொருக்குப்பேட்டை ஆகிய 4 முக்கிய சரக்கு முனையங்களை நவீனமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல உதவும்.

இரண்டு அடுக்கு சரக்கு ரயில் சேவை

சரக்கு ரயில் சேவையை ஒட்டி வழித்தடங்களை மின்மயமாக்கம் செய்தல், இரட்டை அடுக்கு கண்டெய்னர்கள் செல்லக்கூடிய வகையில் பாதைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் நிறைவடைந்ததும் தெற்கு – வடக்கு சரக்கு ரயில் சேவையில் புதிய உத்வேகம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link