அதனை தொடர்ந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன. இதனையடுத்து, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் சி.வி.சண்முகம் தலைமையிலான பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதற்கிடையில் அமமுகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏவான மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ காமராஜ், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஒப்புதலில் இன்றி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தவெகவினர் கோடி கோடியாக பணம் கொண்டு வந்தனர் என ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, “சட்டமன்றத் தேர்தல் முடிந்தப் பிறகு என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாக பணம் எடுத்து எங்களிடம் அமைச்சர் பதவி தருகிறேன், கையெழுத்து போடுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் இல்லை, கொள்கைக்கு சார்ந்தவர்கள், எங்களுடைய இயக்கம் இந்திய முஸ்லீம் கொள்கையுடன் தான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விலக்கிவிட்டோம். லெட்டர் பேடை தயாரித்து பணத்தோடு வந்து பேசினார்கள். எந்த அமைச்சர் பதவி வேண்டும்? உள்ளாட்சி வேண்டுமா? போக்குவரத்து வேண்டுமா என்று பேசினார்கள். எங்களுக்கு அல்லா பதவி கொடுக்கக் கூடியவர்கள், உங்கள் பதவிக்கு எங்களுடைய கொள்கையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று சொன்னோம்” என்று கூறினார்.
