உங்கள் சேமிப்புக் கணக்கில் ‘பாதுகாப்பாக’ இருக்கும் பணம், நீங்கள் நினைப்பது போல் உண்மையிலேயே பாதுகாப்பாக இல்லை. வங்கிகள் பொதுவாக சேமிப்புக் கணக்குகளுக்கு 2.5% முதல் 4% வரை மட்டுமே வட்டி வழங்குகின்றன. ஆனால் பணவீக்கமோ (Inflation) ஆண்டிற்கு 5% முதல் 6% வரை உயர்கிறது. இந்த இடைவெளியால், நீங்கள் கணக்கில் அப்படியே வைத்திருக்கும் ஒவ்வொரு ரூபாயின் வாங்கும் திறனும் கடந்த ஆண்டை விடக் குறைகிறது.
இது ஒரே இரவில் தெரியும் இழப்பு அல்ல; மெதுவாக உங்கள் பணத்தின் மதிப்பை அரிக்கும் ஒரு கசிவு. சும்மா இருக்கும் பணம் உங்களுக்கு உண்மையில் என்ன இழப்பை ஏற்படுத்துகிறது, அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
பணவீக்கம் எனும் அமைதியான வரி
பணவீக்கம் என்பது யாருமே உங்களுக்கு அனுப்பாத ஒரு மறைமுக வரி போன்றது. உங்கள் வங்கி 3% வட்டி தருகிறது, ஆனால் பொருட்களின் விலையோ ஆண்டிற்கு 6% உயர்கிறது என்றால், உங்கள் கணக்கில் இருக்கும் பணம் அதிகரித்தாலும், அந்தப் பணத்தின் உண்மையான வாங்கும் திறன் குறைகிறது.
தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் வட்டி சம்பாதித்தாலும், மதிப்பில் இழப்பையே சந்திக்கிறீர்கள். ஆண்டுகள் செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகரித்து, நீங்கள் “சேமித்து” வைத்த பணம் ஆரம்பத்தில் வாங்கித் தந்த பொருட்களில் பாதியைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்படும்.
உதாரணமாக, இன்று ரூ.1 லட்சத்துக்கு வாங்கக்கூடிய பொருட்களை சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே ரூ.1 லட்சத்தால் வாங்க முடியாமல் போகலாம்.
வங்கி கட்டணங்களின் மறைமுகத் தாக்குதல்
பணவீக்கம் மட்டுமின்றி, பிற கட்டணங்களும் உங்கள் சேமிப்பைக் குறைக்கின்றன. கணக்கை நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணம் மற்றும் எஸ்.எம்.எஸ் (SMS) விழிப்பூட்டல் கட்டணங்கள் தானாகவே பிடிக்கப்படுகின்றன. மேலும், வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை (Minimum Average Balance) பராமரிக்கத் தவறினால், பற்றாக்குறைத் தொகையில் 6% வரை அபராதமாக வசூலிக்கப்படலாம்.
நீங்கள் மறந்துவிட்ட ஒரு கணக்கு கூட, உங்களுக்கே தெரியாமல் தன் இருப்பைக் கரைத்துக் கொண்டே இருக்கும்.
கவனிக்காமல் விட்டால் கணக்கு முடக்கப்படும்
ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தவொரு பரிவாத்தனையும் செய்யாவிட்டால், உங்கள் கணக்கு ‘செயலற்ற கணக்காக’ (Inactive) மாற்றப்படும். இதனால் போன் பேங்கிங், ஏ.டி.எம் சேவைகள் மற்றும் பிற பரிவாத்தனைகள் தற்காலிகமாகத் தடைபடும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை நடவடிக்கை இல்லையெனில், அது ‘முழுமையாக முடக்கப்பட்ட கணக்காக’ (Dormant Account) மாறிவிடும்.
பிறகு முறைப்படி விண்ணப்பித்தால் மட்டுமே அதை மீண்டும் செயல்படுத்த முடியும். இதற்கு எளிய தீர்வு: மாதத்திற்கு ஒருமுறையாவது ஒரு பரிவர்த்தனை செய்யுங்கள், அல்லது தேவையில்லாத கணக்கை முழுமையாக மூடிவிடுங்கள்.
வீண் செலவுகளுக்கான தூண்டல்
இதன் பின்னணியில் ஒரு உளவியல் காரணமும் உள்ளது. உங்கள் தினசரி பயன்பாட்டுக் கணக்கில் அதிகப் பணம் எளிதாகக் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும்போது, தேவையில்லாத பொருட்களின் மீது வீண் செலவு செய்யும் எண்ணம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவசர கால தேவைகளுக்காக நீங்கள் ஒதுக்கி வைத்த பணம், கண் முன்னே சும்மா இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் திட்டமிடாத செலவுகளுக்குப் பயன்படக்கூடும்.
இதற்கான தீர்வு உங்கள் கணக்கில் உள்ள அனைத்துப் பணத்தையும் அப்படியே எடுப்பதல்ல; அதைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதே ஆகும்.
நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் 3 முதல் 6 மாத செலவுகளுக்குத் தேவையான தொகையை அவசர கால நிதியாக (Emergency Fund) சேமிப்புக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
மீதமுள்ள உபரிப் பணத்தை, அதிக வட்டி தரக்கூடிய லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Liquid Mutual Funds) அல்லது குறுகிய கால கடன் பத்திரங்களில் (Short-term Debt Instruments) முதலீடு செய்யலாம். இவை உங்கள் பணத்திற்கான பாதுகாப்பையும், தேவைப்படும்போது எடுக்கும் வசதியையும் தருவதோடு, வருமானத்தை 2-3 சதவீதத்திலிருந்து 6-7 சதவீதம் வரை உயர்த்த உதவும்.
முக்கியமான முடிவு
பல்வேறு தேவைகளுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது நன்மையே. ஆனால், நீங்கள் தீவிரமாகப் பயன்படுத்தாத ஒவ்வொரு கணக்கும் பணவீக்கம், வங்கிக் கட்டணங்கள் மற்றும் முடக்கம் போன்ற ஆபத்துகளால் உங்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. எனவே, நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கணக்கையும் தீவிரமாகக் கண்காணியுங்கள்; உபரிப் பணத்தை முதலீடு செய்யுங்கள், அல்லது பயன்படாத கணக்குகளை உடனடியாக மூடிவிடுங்கள்.
