“யார் மீதும் பொய்யான வழக்கு போட முடியாது”

தமிழகத்தில் 10க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று (05.09.2026) சோதனை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. அதாவது திருச்சி தில்லை நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்கள், சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் இடங்கள் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதோடு ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் சென்னை அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனையானது நடைபெற்றது. அதே போன்று கோவை சிங்காநல்லூரில் உள்ள கே.என். நேருவின் மற்றொரு சகோதரர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில், டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 241 குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது. இருப்பினும், இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கே.என்.நேரு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் கிடையாது. யார் மீதும் பொய்யான வழக்கு போட முடியாது. ஆதாரங்கள் இருந்தால் வழக்கு போடுவார்கள். அவர் கடந்த முறை பணம் வாங்கி வேலைக்கு சேர்த்ததாக அமலாக்கத்துறை ஆதாரத்துடன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. கூட்டு சேர்ந்து நிறைய ஊழல்கள், முறைகேடுகள் செய்ததற்கான ஆதாரப்பூர்வமான ஆதாரங்களை இரண்டு மூன்று முறை அமலாக்கத்துறை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஆதாரங்கள் இருக்கும் போது எப்படி தப்பிக்க முடியும்? அதனால் பொய் வழக்கு எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை.  மக்களுடைய பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்றால் வழக்குகள்பதிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Source link