சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். குறிப்பாக தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். அதுமட்டுமல்லாமல் தொகுதிகள் வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 110 மாவட்டங்களாக விரிவுப்படுத்தி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 85 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
