2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கட்சிக்குள் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக, புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமையின் முடிவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளை தலா இரண்டு தொகுதிகள் வீதம் மூன்று புதிய கழக மாவட்டங்களாக பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநில விவசாய அணி செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் மெய்யநாதன்,ரகுபதி,சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
“காங்கிரஸுக்கு ஏன் கொடுத்தீர்கள்?”
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மேடைக்கு வந்த முன்னாள் அறந்தாங்கி எம்எல்ஏ உதயம் சண்முகம், மைக்கை எடுத்துக்கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
திமுக எளிதில் வெற்றி பெறக்கூடிய அறந்தாங்கி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஏன் ஒதுக்கினீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்தக் கேள்வி கூட்டத்தில் இருந்த நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
“உன் மகன்தான் தோல்விக்கு காரணம்” – ரகுபதி பதிலடி
உதயம் சண்முகத்தின் கேள்வியால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, அறந்தாங்கி தொகுதியில் திமுக தோல்வியடைந்ததற்கு உதயம் சண்முகத்தின் மகனின் செயல்பாடுகளே காரணம் என பதிலளித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தவெக வேட்பாளர் பர்வேஸை தொகுதியில் தெருத்தெருவாக அழைத்துச் சென்று அவரது மகன் வாக்கு சேகரித்ததாகவும், அதுவே திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் ரகுபதி கடுமையாக குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து, இருவரையும் சமாதானப்படுத்தவும் எச்சரிக்கவும் முயன்றனர்.
அதிமுகவுக்கு முன்பே சொன்னேன்! பாஜக கூட்டணி பற்றி திருமாவளவன் அதிரடி!அதிமுகவின் எதிர்காலம் என்ன?
திமுகவின் மாவட்ட மறுசீரமைப்பு மற்றும் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலேயே, முன்னாள்அமைச்சரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி மோதிக் கொண்ட சம்பவம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், நிர்வாகிகளிடையே வெளிப்படும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் கட்சியின் எதிர்கால கட்டமைப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
