மருத்துவ உலகில் ஒரு முக்கிய திருப்பமாக, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) விஞ்ஞானிகள், மருந்துகளுக்குக் கட்டுப்படாத பலவகை பாக்டீரியாக்கள் உருவாக்கும் ‘பயோஃபிலிம்களை’ (Biofilms) அழிக்கும் திறன் கொண்ட பசுவின் செரிமான மண்டல என்சைம் ஒன்றை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட தேபாசிஸ் தாஸ், ரேஷ்மா ராமகிருஷ்ணன், கீர்த்தி பர்மார, தீப்ஷிகா சக்ரவர்த்தி, தேவமித்ரா சென், வேல்பண்டி ராமச்சந்திரன் மற்றும் ராஜு எஸ். ராஜ்மணி ஆகிய ஐ.ஐ.எஸ்.சி விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர், தங்களது ஆராய்ச்சி முடிவுகளை சர்வதேச நேச்சர் அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.
பாக்டீரியாக்கள் தங்களை ஆன்டிபயாட்டிக் மருந்துகளிலிருந்தும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள ‘பயோஃபிலிம்’ எனப்படும் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கிக் கொள்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பரில், ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் இதேபோன்று பசுவின் உடலிலிருந்து பெறப்பட்ட GH B2 என்ற என்சைமை சோதித்தனர். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தொற்றை ஏற்படுத்தும் கிளெப்சியெல்லா நியூமோனியே (Klebsiella pneumoniae) என்ற பாக்டீரியா உருவாக்கும் பயோஃபிலிம்களை இந்த என்சைம் வெற்றிகரமாக உடைத்தது. பயோஃபிலிம்களில் உள்ள பாலிசாக்கரைடு (சர்க்கரை மூலக்கூறுகள்) சங்கிலிகளை உடைப்பதன் மூலம், பாக்டீரியாக்களை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குப் பலியாகும் நிலைக்கு இது கொண்டு வந்தது.
தற்போது 2026 இல் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் CRhAB எனப்படும் மற்றொரு புதிய என்சைமைப் பிரித்தெடுத்துள்ளனர்.
இந்த என்சைம் கிளெப்சியெல்லா நியூமோனியே (Klebsiella pneumoniae) பாக்டீரியாவின் பயோஃபிலிமை மட்டுமல்லாமல், மருத்துவமனைகளில் காயம் மற்றும் மருத்துவ உபகரணங்களின் மேற்பரப்புகளில் மிக எளிதாகப் பரவி சிகிச்சையைத் தாமதப்படுத்தும் அசினிடோபாக்டர் பாமான்னி (Acinetobacter baumannii) என்ற ஆபத்தான பாக்டீரியாவையும் அழிக்கும் திறன் கொண்டது.
இந்த இரு பாக்டீரியாக்களும் ESKAPE எனப்படும் தீவிர மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட ஆபத்தான கிருமிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எலிகளில் வெற்றிகரமான சோதனை
ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய என்சைமை எலிகளின் காயங்களில் வைத்து, என்சைம் பொருத்தப்பட்ட துணி மூலம் கட்டுப்போட்டுச் சோதித்தனர்.
இதுகுறித்து நுண்மையியல் துறை பேராசிரியர் தீப்ஷிகா சக்ரவர்த்தி கூறுகையில்:
“ஆய்வின் போது எலிகள் இயல்பாகவே தங்கள் காயத்திலிருக்கும் கட்டை அவிழ்க்க முயன்றதால், அந்த என்சைம் பூசப்பட்ட துணியைக் காயம் ஆறும்படி நிலைநிறுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. எலிகளுக்கு எவ்வித மன அழுத்தமும் ஏற்படாத வகையில் சோதனைக் கட்டமைப்பைச் சீரமைத்து வெற்றிகரமாக முடித்தோம்” என்றார்.
எதிர்காலத் திட்டங்கள்
ஐஐஎஸ்சி ஆராய்ச்சிக்குழுவினர் தற்போது இந்த என்சைமைப் பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளின் கால் புண்களுக்குப் (Diabetic Foot Infections) பயன்படுத்தக்கூடிய சிறப்பு காயக் கட்டுகளை (Wound Dressings) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சுவாசப்பாதை தொற்றுகளைக் குணப்படுத்த இந்த புதிய என்சைமை இன்ஹேலர் வடிவில் பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.
