டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் இன்று (06.09.2026) நேரிட்ட பயங்கர கட்டிட விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரண்டு பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், மோப்ப நாய் படை மற்றும் ஜேசிபி இயந்திரங்களின் உதவியோடு தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்ற துல்லியமான எண்ணிக்கை தற்போது வரை தெரியவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.கே. புரம், சத்ய நிகேதனில் நடந்த கட்டிட விபத்து மிகுந்த கவலையளிக்கிறது.
டிடிஎம்ஏ, என்டிஆர்எஃப் , டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, எம்சிடி , கேட்ஸ் மற்றும் சிவில் டிஃபென்ஸ் ஆகிய அமைப்புகளின் குழுக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்துள்ள கட்டடம் காலி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரின் பாதுகாப்பும் எங்களது முதன்மையான முன்னுரிமையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
