எஸ்ஐஆரால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையை வெளியிடுங்கள்; முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் வலியுறுத்தல்

புவனேஸ்வர்: எஸ்ஐஆர் நடைமுறையால் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ். ஒய். குரேஷி வலியுறுத்தி உள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது;

எஸ்ஐஆர் எனப்படும் கடினமாக பணியை வெற்றிகரமாக முடித்த தேர்தல் கமிஷனை நான் பாராட்டுகிறேன். இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் சட்ட விரோத குடியேறிகளை கண்டறிவதுதான்.

ஆனால் எத்தனை சதவீதம் சட்டவிரோத குடியேறிகளை அவர்கள் கண்டுபிடித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்கள் ( தேர்தல் கமிஷனை குறிப்பிடுகிறார்) இந்த எண்ணிக்கையை வெளியிடாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

தேசிய மக்கள் தொகை ஆணையத்தால் செய்ய முடியாத ஒன்றை சாதித்த வெற்றியை வெளிக்காட்டும் விதமாக, அவர்கள் இந்த எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அந்த விவரங்களை தயவுசெய்து வெளியிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எண்ணிக்கையை அறிவித்தால் தான். அப்போது பெற்ற வெற்றி எவ்வளவு என்பதை அறிந்து கொள்வோம்.

நாட்டு மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்தை அகற்றுவதன் வழியாக, மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான பங்களிப்பை ஆற்றி இருக்கிறீர்கள். ஓட்டுப்போடுவது ஒரு அரசியலமைப்பு உரிமை. தேர்தல் கமிஷனால் வழங்கப்படுவது அல்ல.

இவ்வாறு எஸ்.ஒய். குரேஷி கூறினார்.

Source link