தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் சங்கிலி முருகன். இவர் தனது தயாரிப்பில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறித்து ‘டூரிங் டாக்கீஸ்’ நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கிலி முருகனிடம், “கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகிய மூன்று பேருடனும் உங்களுக்கு இருந்த பழக்கம் எப்படி?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சங்கிலி முருகன், செந்தில் எனது சொந்தக்காரர், அவருடன் நீண்ட காலமாக நெருக்கமான பழக்கம் இருந்தது என்று கூறியுள்ள சங்கிலி முருகன், அதேபோல், கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இது குறித்து பேசிய அவர், நான் தயாரித்த முதல் படமான கரிமேடு கருவாயன் படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரும் சம்பளமே வாங்கவில்லை. வினு சக்ரவர்த்தி சம்பளம் வாங்கவில்லை. நம்பியார் மட்டும் சம்பளம் வாங்கினார். விஜயகாந்த் குறைவாக வாங்கினார். ஆனால் இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் இருவரும் சேர்ந்து வருவது போன்ற காட்சிகள் இல்லை. ஆனால் அடுத்த படமான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் கவுண்டமணி இல்லை. அதன்பிறகு 3-வது படமான சர்க்கரை பந்தல் படத்தில் இருவரும் இணைந்து வருவது போன்ற காட்சிகள் இருந்தது.
அடுத்து நான் தயாரித்த படங்களில் செந்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். காதலுக்கு மரியாதை படத்தில் இளம் நடிகர்கள் தேவை என்பதால் சார்ளியும், தாமுவும் நடித்தனர். அதன்பிறகு பாசமுள்ள பாண்டியரே படத்தில் வடிவேலு செந்தில் இணைந்து நடித்தனர். அடுத்து சுறா படத்தை தயாரித்தேன். அதில் வடிவேலுவை போடலாம் என்றால், அவரது சம்பளம் அதிகமாகிவிட்டது. ரொம்ப அநியாயமாக போய்விட்டார். எனக்கே ஷாக் ஆகிவிட்டது. மண்டகணம் அதிகமாகிவிட்டது. தேவர் மகன் படப்பிடிப்பின்போது என் பெட்டிகளை தூக்கி வருவான்.
நான் வேண்டாம் என்று சொன்னாலும் பரவாயில்லை வாங்கண்ணே என்று சொல்வான். அதன்பிறகு ரொம்ப மண்டகணம் ஆகிவிட்டது. சுறா படப்பிடிப்பின்போது அது வேண்டும், இது வேண்டும் என்று அதிகமாக கேட்டான். ஒரு நாளைக்கு அவனுக்கு ரூ10 லட்சம் சம்பளம். ஆனால் அரை நாளுக்கு கூட ரூ10 லட்சம் சம்பளம் வாங்கினான் என்று சங்கிலி முருகன் கூறியுள்ளார்.
